"ஒழுக்கமற்ற நடவடிக்கை":நைஜீரிய நடிகைக்கு தடை

நைஜீரியாவின் முன்னணி நடிகை ஒருவருக்கு ஹௌசா மொழி திரைப்படத்துறை தடை விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை FINESSE ENTERTAINMENT
Image caption 'ஐ லவ் யூ' இசைக் காணொளியில் நடிகர் கிளாஸிக்குடன் நடிகை சாடோ

ரஹாமா சாடோ எனும் அந்த நடிகை "ஒழுக்கமற்ற நடவடிக்கை" எனத் தாங்கள் கருதும் செயல்பாடுகளில் ஈடுபட்டார் என நைஜீரிய திரைப்படத் தயாரிப்பாளர் சம்மேளனத்தினர் கூறுகின்றனர்.

இசைக் காணொளி ஒன்றில் பாடகர் ஒருவருடன் அவர் நெருக்கமாக கட்டியணைத்தபடி நடித்தார் என அந்தச் சம்மேளனம் கூறுகிறது.

ஆனால் சாடோவிடமிருந்து எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.

படத்தின் காப்புரிமை FINESSE ENTERTAINMENT
Image caption இந்தக் காட்சி 'ஏற்புடையதல்ல' என இஸ்லாமிய மதகுருமார் கூறுகின்றனர்

முன்னர் பல முறை விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அவர் புறந்தள்ளியதாலேயே இப்போது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தயாரிப்பாளர் சம்மேளனத்தின் தலைவர் பிபிசியின் ஹௌசா மொழி சேவையிடம் தெரிவித்தார்.

கேனிவுட் என்றழைக்கப்படும் ஹௌசா திரைப்படத்துறை பழமைவாத முஸ்லிம் மதகுருமார்களால் விமர்சிக்கப்படுகிறது.

பொதுவெளியில் இருபாலாரும் கைகளை பற்றிக்கொள்வது அல்லது முத்தமிடுவது தடை செய்யப்பட்டவை என அவர்கள் கருதுகின்றனர்

ஹௌசா மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் நைஜீரியா, நிஜேர், கானா, கேமரூன் ஆகிய நாடுகளிலும், அங்கிருந்து புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் மக்களிடமும் மிகவும் பிரபலமாகவுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையுமென தயாரிப்பாளர் சம்மேளனம் கூறியுள்ளது.