காவிரி பிரச்சனை: இரண்டாவது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்றும் இரண்டாவது நாளாக ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. வைகோ, திருமாவளன், ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாய சங்கங்களும் அறிவித்தன.

அதன்படி நேற்று பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றன. இதனால், 16 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலையிலும் சீர்காழி, கீழ் வேளூர் ஆகிய இடங்களில் ரயில் பாதைகளை மறித்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.

கும்பகோணத்தில் மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் செல்லும் ரயில் மறிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி வாழாடி ரயில் நிலையத்தில் மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டனர்.

சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ரயில் பாதையை மறித்த தொண்டர்கள், வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஆவடி ரயில் நிலையத்தில் சென்னை கடற்கரையை நோக்கிச் செல்லும் ரயில் பாதையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி ஆனந்தன் தலைமையில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

தஞ்சாவூரில் போராட்டம் நடத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.

இந்தப் போராட்டங்களின் காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 30,000 பேர்வரை கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்