தாக்குதலுக்குள்ளான மொசூல் நகரிலிருந்து 900 பொதுமக்கள் தப்பியோட்டம்

இராக்கிய நகரான மொசுலிலிருந்து 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தப்பியோடி, எல்லையைத் தாண்டி சிரியாவுக்குள் நுழைந்துவிட்டதாக ஐநா மன்ற அகதிகள் நிறுவனம் கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மொசூல் நகருக்குக் கிழக்கே குர்து பெஷ்மெர்காப் படையினர்

இந்நகரை இஸ்லாமிய அரசு குழுவிடமிருந்து மீண்டும் கைப்பற்ற அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் ஆதரவோடு இராக்கியப் படைகள் திங்கட்கிழமை தாக்குதல் ஒன்றைத் தொடங்கியதிலிருந்து, மொசூல் நகரிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தப்பிவிட்டனர் என்பதைக் காட்டும் முதல் உறுதிசெய்யப்பட்ட தகவல் இதுவாகும்.

இராக்கில் இஸ்லாமிய அரசு அமைப்பின் கையில் இன்னும் சிக்கியிருக்கும் கடைசி பெரிய கோட்டை மொசூல் நகரம் மட்டும்தான். இந்நகரம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

தாக்குதல் மூன்றாவது நாளாகத் தொடங்குகையில், மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையின் வேகம் சற்று குறைந்திருக்கிறது.

தென் பகுதியிலிருந்து முன்னேறி வரும் இராக்கிய படையினர் , பொதுமக்கள் வசிக்கும் பெரிய கிராமங்களையே இதுவரை கண்டிருக்கிறார்கள்.

வடக்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் முன்னேறி வரும் குர்து பெஷ்மெர்கா படைகள் தாங்கள் ஏற்கனவே கைப்பற்றிய இடங்களில் தங்கள் நிலைகளை பலப்படுத்திக்கொள்வதில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.