வங்கி ஏடிஎம் அட்டைகள் தகவல் திருட்டு: விசாரணை துவங்கியது

வங்கி ஏடிஎம் அட்டைகளின் தகவல்கள் கசிந்த விஷயத்தில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் இந்தியாவில் அட்டைகள் மூலம் நடக்கும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

"வாடிக்கையாளர்களுக்குப் புதிய அட்டையை வழங்கவேண்டும் என அறிவுறுத்தியிருப்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே" என அந்த அமைப்பின் இயக்குனர் ஏ.பி.ஹோடா தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களது அட்டைகள் சில வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக சீனாவிலும் அமெரிக்காவிலும் பயன்படுத்தப்பட்டதாக இந்தப் புகார்கள் வந்தன.

இதனால், வாடிக்கையாளர்களின் டெபிட் அட்டைத் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் இந்தியாவில் பண அட்டை பரிமாற்றத்திற்கான சேவைகளை வழங்கும் ருபே, விசா, மாஸ்டர்கார்ட் ஆகியவை செப்டம்பர் மாதத்தில் இது குறித்து விவாதித்தன.

இதன் மூலம் ஏதாவது ஒரு சேவை வழங்கும் நிறுவனத்திலிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது.

மொத்தமாக 19 வங்கிகளைச் சேர்ந்த 641 வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 1.3 கோடி ரூபாய் அளவுக்கு பணம் திருடப்பட்டிருந்தது.

ரூபே சேவையை பயன்படுத்திவரும் வாடிக்கையாளர் இதனால் பாதிக்கப்படவில்லையென்று தெரிகிறது. அந்த சேவையைப் பயன்படுத்திய யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை.

இதையடுத்து எல்லா வங்கிகளும் உஷார்படுத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக 32 லட்சம் அட்டைகளின் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றில் 6 லட்சம் அட்டைகள் ரூபே சேவையினுடையவை.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் அட்டைக்கான ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றும்படி வங்கிகள் அறிவுறுத்தின. வாடிக்கையாளர்களை அணுகமுடியாத பட்சத்தில் அவர்களுக்கு புதிய அட்டைகளை வங்கிகள் வழங்கத் துவங்கியுள்ளன.