தஞ்சை, திருப்பரங்குன்றம்,அரவக்குறிச்சி இடைத்தேர்தல்களில் போட்டியில்லை: சி.பி.எம்.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அக்கட்சி கூறியிருக்கிறது.

Image caption போட்டியில்லை - சிபிஎம்

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்திருக்கும் அறிக்கையில், இந்தத் தேர்தல் தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி கட்சிகளிடையே அக்டோபர் 21ஆம் தேதி நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, தேர்தலில் போட்டியிட வேண்டுமென தாங்கள் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு 26ஆம் தேதி நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், மீண்டும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச முடிவு செய்யப்பட்டதாகவும் ஆனால், அதில் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், இந்த மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதில்லையென முடிவு செய்யப்பட்டதாக ஜி. ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக, மக்கள் நலக் கூட்டணி தேர்தலைப் புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார். ஆனால், ஊடகங்கள் சிலவற்றிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன் இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லையெனக் கூறினார்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.