ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் ஊடுருவல்: முதல்வர் குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை DIPR
Image caption கட்டுப்பாட்டுடன் காவல்துறை: முதல்வர்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில், தேசவிரோத சக்திகள் ஊடுருவி, பிரிவினைவாத எண்ணங்களைப் பரப்பி, வன்முறையைத் தூண்டிய காரணத்தால்தான் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார். ஆனால், முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து, திமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.

ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடர்பாக நடந்த போராட்டங்கள் மற்றும் ஜனவரி 23-ஆம் தேதி நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கடசித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதுதொடர்பாக, முதலமைச்சர் நீண்ட விளக்கமளித்தார்.

ஜனவரி 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம் துவங்கியது. அவர்களை விடுவித்த பிறகும், ஜல்லிக்கட்டுக்கு சட்ட ரீதியான அனுமதி கோரி, சென்னை, கோவை, மதுரை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் காத்திருப்புப் போராட்டங்கள் துவங்கியதாக முதல்வர் குறிப்பிட்டார்.

டெல்லியில் பிரதமரைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு, அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு, ஜனவரி 20-ஆம் தேதி இரவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுடன், 21-ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, 23-ஆம் தேதி அவசரச் சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்பதையும் எடுத்துக் கூறியதாக முதல்வர் சுட்டிக்காட்டினார்.

பின்லேடம் படம்?

"ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டம் கொண்டுவரும் வரை போராட்டம் தொடரும் என மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்தது. சென்னை மெரீனா கடற்கரை மற்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களிடையே, பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி போராட்டத்தை திசை திருப்பும் வகையில் பேசி வந்தனர். மேலும், குடியரசு தினம் வரை போராட்டத்தில் ஈடுபட்டு குடியரசு தினத்தன்று கறுப்புக் கொடி காட்டுதல், குடியரசு தின விழாவை சீர்குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன," என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

"ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகும், காவிரி, முல்லைப் பெரியாறு, பன்னாட்டு வர்த்தகங்கள் மீதான தடை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒரு பிரிவினர் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து தனித் தமிழ்நாடாக அறிவிக்க வேண்டுமென்றும் கோரினர். போராட்டத்தின்போது ஒசாமா பின் லேடன் படம் வைத்திருந்தவர்கள், `இந்திய குடியரசு தினத்தை நிராகரிக்கிறோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர். அதற்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளன," என்று தெரிவித்தார்.

"ஜனவரி 23-ஆம் தேதி, பல்வேறு தேச விரோத, சமூக விரோத சக்திகள் போராட்டத்தில் ஊடுருவி வன்முறையில் ஈடுபட தி்ட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, மெரீனாவில் போலீசார் போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதையடுத்து, பத்தாயிரம் பேர் கலைந்து சென்ற நிலையில், சுமார் இரண்டாயிரம் பேர் மட்டுமே போராட்டத்தைக் கைவிட மறுத்து தொடர்ந்தனர். இந்நிலையில், பல இடங்களில் போலீஸ் தடுப்புக்களை உடைத்துக் கொண்டு சிலர் கடற்கரையை நோக்கி முன்னேறியதால் போலீசார் குறைந்தபட்ச பலத்தை உபயோகித்தும், கண்ணீர் புகையை உபயோகித்தும் அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்," என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

நடுக்குப்பத்தில் நடந்தது என்ன?

காவல் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது மட்டுமன்றி, பல இடங்களில் மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை நடுக்குப்பத்தில், ஒரு கும்பல் போலீசார் மீது கற்கள் மறறும் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியதால் அங்கிருந்த மீன் மார்க்கெட்டில் தாற்காலிக பந்தல்கள், வாகனங்கள் உள்ளிட்டவலை எரித்து சேதமடைந்ததாகவும், குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்து வன்முறையாளர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர் என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை MkStalin
Image caption மு.க.ஸ்டாலின்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல அனுமதிக்காமல், அவர்களைத் திசை திருப்பி, அரசுக்கு எதிராகவும், பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் வகையிலும் செயல்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, தடியடி போன்ற பலப்பிரயோகம் செய்யாமல், போலீசார் குறைந்தபட்ச பலத்தை மட்டுமே உபயோகித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படாமல் அந்த சக்திகளைக் கலைத்து சட்டம் ஒழுங்கைப் பராமரித்தனர் என்று முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

திமுக வெளிநடப்பு

அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதன் பின்னணி குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், முதலமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.

இதற்குக் கண்டனம் தெரிவித்து, திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், போலீசாரே வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்பட அனைத்தும் சேகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலர், ஆளுநர், தேசிய மனித உரிமை ஆணையம், தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தால் நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் மீனவர்கள் பழிவாவங்கப்படுவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்