திமுகவை சீண்ட வேண்டாம்: முதல்வரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூற சசிகலாவுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் தான் பட்ட அவமானங்களை பட்டியலிட்டிருக்கிறார். திராணி இருந்தால் அதற்கு திருப்பி பதில் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு திமுகவை சீண்ட வேண்டாம் என்று மு. க. ஸ்டாலின் சசிகலாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பன்னீர் செல்வத்தின் பின்னணியில் திமுக: சசிகலா குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை IMAGE COPYRIGHTMKSTALIN
Image caption ஓ. பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறுங்கள்: மு.க. ஸ்டாலின்

இது தொடர்பாக மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எதிர்க்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்' என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது அவர் ஏற்கனவே நான் பினாமி அல்ல என்று "சொத்துக் குவிப்பு வழக்கில்" வைத்த உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

நினைத்த வேகத்தில், குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆக முடியவில்லை என்ற ஏக்கத்தில் 'எதைத் தின்னால் பித்தம் தெளியும்' என்ற போக்கில் திமுக மீது போலி விமர்சனத்தை வைத்துள்ளதாகவே கருதுகிறேன் என்று தெரிவித்த மு. க. ஸ்டாலின், அதிமுகவிற்குள் நடக்கும் கேலிக் கூத்துகளுக்கும், அரசியல் கோமாளித்தனங்களுக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சசிகலா அறிய வேண்டும் என்றால் அவர் முதலில் தமிழக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்று மேலும் கூறியுள்ளார்.

’அரை வேக்காட்டு அரசியல்’

'முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை போயஸ் தோட்டத்திற்கு வர வைத்து, இரண்டு மணி நேரம் மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்ற சசிகலா நடராஜன், அதிமுக தொண்டர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இப்படி தி.மு.க. மீது பழி போடுவது அரைவேக்காட்டுத்தன அரசியல்' என்று மு. க. ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற போது அந்நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் பங்கேற்றேன். அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களே அதற்காக எனக்கு நன்றி தெரிவித்ததை தோழி என்று சொல்லிக் கொள்ளும் திருமதி சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் இருப்பது எப்படி? என ஸ்டாலின் வினவினார்.

சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் நானும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி சிரித்துக் கொண்டிருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதாவைப் பார்த்து திருமதி சசிகலா நடராஜன் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க முடியுமா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இன்றைக்கு முதலமைச்சரையே மிரட்டியிருக்கின்ற நிலையில், இந்த மிரட்டல் குறித்தும், போயஸ் கார்டனில் அமர்ந்து கொண்டு நிலைத்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறேன். முதல்வரே மிரட்டப்பட்டிருப்பதால் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுப்பதை விட இது குறித்து சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு அவர் பட்ட அவமானங்களை மறைந்த அம்மையார் ஜெயலலிதா சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார். திராணி இருந்தால் அதற்கு திருப்பி பதில் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு திமுகவை சீண்ட வேண்டாம் என்று மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்