டிடிவி தினகரனுக்கு நீதிமன்றக் காவல் நீடிப்பு

  • 15 மே 2017

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AIADMK

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கா அல்லது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணிக்கா என்ற சர்ச்சை எழுந்தது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அந்தச் சின்னம், முடக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் காரணமாக, இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந் நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரனும், இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். முதலில் சுகேஷ் சந்திரசேகரும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனும் கைது செய்யப்பட்டனர். மேலும், தினகரன் கொடுத்தாகக் கூறப்படும் 10 கோடி ரூபாய் முன்பணத்தில் 1.30 கோடியை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கடந்த மாதம் 25-ஆம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ஹவாலா தரகர் நரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், தினகரனின் காவல் இன்று முடிவடைந்த நிலையில், சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் போலீசார் அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்றக் காவலை வரும் 29-ஆம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், வரும் 18-ஆம் தேதி, தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகரின் குரல் மாதிரியைப் பதிவு செய்ய அனுமதி கோரும் போலீசாரின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த விசாரணைக்கு சுகேஷ் சந்திரசேகர் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

டிடிவி தினகரன் தொடர்பான பிற செய்திகள்:

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது

தில்லியில் டி.டி.வி. தினகரன் கைது; என்ன சொல்கிறார்கள் அரசியல் பிரபலங்கள்?

அ.தி.மு.கவைவிட்டு ஒதுங்கியதாக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

தினகரன் நீக்கம், சசிகலா குடும்பத்தின் நாடகம் என ஓ.பி.எஸ். தரப்பு குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்