'கைதி நம்பர். 150': சிரஞ்சீவி திரைப்படத்தை காண விடுமுறை அளித்த வளைகுடா நிறுவனங்கள்

10 ஆண்டுகளுக்கு பிறகு, பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவியின் திரைப்படம் வெளியாவதையொட்டி, அத்திரைப்படத்தை காண வளைகுடா நாடுகளில் உள்ள பல நிறுவனங்களுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப் படம்

வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் எண்ணற்ற தெலுங்கு மொழி பேசும் பணியாளர்களின் வசதிக்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு தரப்பில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

கைதி நம்பர் 150

ஓமனை தவிர வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கடார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமாக கருதப்படும் சிரஞ்சீவியின் புதிய திரைப்படமான 'கைதி நம்பர் 150' இன்று வெளியாகிறது.

பத்தாண்டுகளுக்கு பிறகு, நடிகர் சிரஞ்சீவியின் திரைப்படம் வெளியாவதால், வளைகுடா நாடுகளில் உள்ள ஏறக்குறைய 4 லட்சம் தெலுங்கு மொழி பேசும் மக்களின் வசதிக்காக பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளன.

விடுமுறை அளிக்காத நிறுவனங்களும், பணியாளர்கள் இன்று பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன.

திரைப்படத்தை காண விடுமுறை வழங்கிய நிறுவனங்கள்

படத்தின் காப்புரிமை FACEBOOK

ஓமன் நாட்டில் உள்ள அல் ரியாத் கட்டுமான, வர்த்தக மற்றும் எல்எல்சி நிறுவனம் இன்று தங்களின் நிறுவனத்துக்கு அதிகாரபூர்வமாக விடுமுறை அளித்துள்ளது.

அவர்கள் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- ''தெலுங்கு திரைப்படங்களின் அரசன் என்று கருதப்படும் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் திரைப்படமான 'கைதி நம்பர் 150' புதன்கிழமை வெளியாவதையொட்டி, நிறுவனத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை ROMDOSS CHANDAK

இந்நிறுவனத்தின் மேலாளரான ராமதாஸ் சண்டாகா கூறுகையில், ''சிரஞ்சீவியின் மீது எங்களுக்குள்ள அளவில்லாத அன்பை காட்டும் வண்ணம் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எங்களின் ஆதர்ச கதாநாயகன் திரும்ப வந்துள்ளார் என்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்