`திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியை நிறுத்துவதால் பயனில்லை': இயக்குநர் பாலா

பாலா படத்தின் காப்புரிமை Cancer Institute (WIA), Chennai

புகையிலை நிறுவனங்களை ஊக்குவிக்கும் இந்திய அரசு, திரைப்படங்களில் புகைபிடிப்பது ஆபத்து என்ற விழிப்புணர்வு செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்று திரைப்படத்துறையை கட்டாயப்படுத்துவதில் எந்த நன்மையும் இல்லை என திரைப்பட இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புகை பிடிப்பதை நிறுத்திய 39 நபர்கள், சினிமா பிரபலங்களுடன் இரவு உணவு சாப்பிடும் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வு குறித்த செய்தியறிக்கையில் இந்தியாவில் 40-50 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணம் புகையிலை பயன்பாடுதான் என்று கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Cancer Institute (WIA), Chennai

மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் சுமார் 7.36 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் பாலா திரைப்படம் தொடங்குவதற்கு முன், இடைவேளை, முடிந்த பிறகு என புகையிலை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு செய்தியை ஒளிபரப்புவது எந்தவிதத்திலும் பயனளிக்காது என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Cancer Institute (WIA), Chennai

''திரைப்படத்திற்கு வரி, புகையிலை நிறுவனங்களிடம் இருந்து வரி என இரண்டு தரப்பினரிடமும் அரசு வரியை வசூலிக்கிறது. திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை தடைசெய்வது அல்லது புகையிலை பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு செய்தியை ஒளிபரப்பவேண்டும் என்று கூறுவதில் எந்த நியாயமும் இல்லை. புகையிலை நிறுவனங்களை முழுமையாக தடை செய்யாமல், இரண்டுதரப்பினரிடம் வரியை வசூலித்துக்கொண்டு, திரைப்படங்களில் விழிப்புணர்வு செய்தியை காட்டவேண்டும் என்று கூறுவது மோசமான செயல்,''என்றார்.

''திரைப்படத்தில் புகைபிடிப்பது ஒரு காதாபாத்திரத்தின் இயல்பு என்றால், அதை மாற்றுவது தேவையற்றது. திரைப்படத்தில் ஒன்றியிருக்கும் பார்வையாளருக்கு விழிப்புணர்வு செய்தியைக் கொடுப்பது பொருந்தாத ஒன்று,'' என்றார் பாலா .

படத்தின் காப்புரிமை Cancer Institute (WIA), Chennai

திரைப்படங்களுக்கும், புகையிலை பயன்பாட்டிற்கும் தொடர்பு இல்லை என்று கூறமுடியாது என்று வாதிடுகிறார் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்தும் மக்கள் அமைப்பைச் சேர்ந்த சிறில் அலெக்சாண்டர்.

''புகையிலை நிறுவனங்கள் மற்றும் திரைப்பட துறையினரிடம் அரசாங்கம் வரி வசூலிப்பது உண்மைதான். ஆனால் திரைப்படங்களைப் பார்த்து சில பதின்ம வயது குழந்தைகள் புகைப்பழக்கத்தைக் கற்றுகொள்கின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்”. என்கிறார் சிறில்.

தற்போதும் கூட ரஜினி பாணியில் சிகரெட் பிடிப்பதை பெருமையாக எண்ணும் இளைஞர்கள் உள்ளனர் என்று கூறிய அவர், ''திரைப்பட துறைக்கு சமூகப்பொறுப்பு உள்ளது. புகை, மது காட்சிகள் இடம்பெறாத படங்கள் சாதனை பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்,'' என்றார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டும் துல்லிய வீடியோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :