பாரம்பரியக் கலைகள்: யுனெஸ்கோ பரிசீலனை

யுனெஸ்கோ படத்தின் காப்புரிமை Reuters

பாரம்பரிய கலாச்சாரச் சின்னங்களாக விளங்குவதற்குரிய கலைகள் என்ற அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ள எண்பதுக்கும் மேற்பட்ட விஷயங்களை தேர்ந்தெடுப்பதற்காக யுனெஸ்கோ அமைப்பினர் இந்தோனேஷியாவின் பாலி தீவில் கூடியுள்ளனர்.

இந்தோனேஷியாவின் அச்சே பிராந்தியத்தில் பல காலமாக ஆடப்பட்டுவருகின்ற 'சமன்' நாட்டியம், வடகிழக்குச் சீனாவில் இருந்துவருகின்ற கதாகாலட்சேபம், இரானில் படகு கட்டுமானத்தில் இருந்துவருகின்ற பாரம்பரிய வழிமுறை போன்றவற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய அளவுக்கு உயர்வானவை எவை என்பதை முடிவுசெய்வதற்காகத்தான் ஐ.நா.மன்றத்தின் கலாச்சார பாதுகாப்பு நிறுவனமான யுனெஸ்கோவின் அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.

யுனெஸ்கோ அமைப்புக்கு இருந்துவருகின்ற நிதி அழுத்தங்களையெல்லாம் சற்று தள்ளிவைத்து விட்டு, இந்த அமைப்பு இந்த விண்ணப்பங்களை இப்போது பரிசீலிக்கிறது.

வியட்நாமின் வட மேற்குப் பகுதிகளில் சாதாரணமாக பண்டிகைகளின்போதும் திருவிழாக்களின்போதும் பாடப்படுபம் 'சுவன்' நாட்டுப்புறப் பாடல்கள் இந்த அந்தஸ்துக்காக விண்ணபிக்கப்பட்டுள்ளது.

சமாதானமாக வாழுதல், தேவைக்கேற்ற வானிலை வேண்டியோ, பருவ காலங்களை வருணித்தோ பாடப்படும் பாடல்கள் இவை.

சுவன் நாட்டுப் புறப் பாடல்களைப் பாடக்கூடிய பெரியவர்களில் மிகச் சிலர்தான் அந்தக் கலையை அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொடுத்திருந்தனர்.

சில சங்கங்களிலும் குழுக்களிலும் இந்தப் பாரம்பரியப் பாடல்கள் பாடப்படுகின்றன என்றாலும் சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போனால் இந்தக் கலை விரைவில் அழிந்துபோய்விடும் என்று வியட்நாம் கூறுகிறது.

அழிவின் விளிம்பில் பாரம்பரியக் கலைகள்

பல தலைமுறைகளாக விளங்கிவருகின்ற இந்தக் கலைகள் எதிர்காலத்திலும் விளங்க வேண்டும் என உறுதிசெய்வதற்கான வழி இது என்று யுனெஸ்கோ வாதிடுகிறது.

ஆனால் இம்மாதிரியான கலைகளில் எவற்றை எல்லாம் பாரம்பரிய கலாச்சாரச் சின்னம் என்ற பட்டியலில் சேர்ப்பதென்பது அவ்வளவு எளிதாக தீர்மானிக்கக்கூடிய விடயமல்ல.

கம்போடியாவில் நெடிய கழுத்துடைய நரம்பு வாத்தியங்களை வைத்துக்கொண்டு காவியக் கதைகளை பாடல்களாகப் பாடும் கலையை மங்கோலியாவில் அனாதையான ஒட்டகக் குட்டிகளை வேறு ஒட்டகங்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதற்காகப் பாடல்கள் பாடும் கலையோடு ஒப்பிட வேண்டும்.

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் ஒரு வார காலத்துக்கு யுனெஸ்கோ பிரதிநிதிகள் இந்த விஷயங்களையெல்லாம் விவாதிக்கவுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் யுனெஸ்கோ

தனது பணிகளில் பெரும்பாலானவற்றை இந்த வருடக் கடைசி வரையில் நிறுத்திவைக்க வேண்டிய ஒரு பொருளாதார நெருக்கடியில் யுனெஸ்கோ இருக்கிறது.

பாலஸ்தீனத்துக்கு உறுப்புரிமை வழங்க யுனெஸ்கோ முடிவெடுத்ததை அடுத்து அமெரிக்கா அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்திக்கொண்டதால் இந்த நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால் தற்போதைய கூட்டத்தை இந்த நிதி நெருக்கடி பாதிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பாரம்பரிய கலாச்சார சின்னமாக அறிவிக்கப்படும் கலைகளுக்கு தொடர்ந்து நிதி உதவிகள் கிடைக்குமா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.