பீட்டல்ஸ் 50: இசை ரசிகர்களின் சமர்ப்பணத்தில் புதிய சாதனை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 அக்டோபர், 2012 - 16:12 ஜிஎம்டி
1600-க்கும் மேற்பட்ட இசை ரசிகர்கள் லவ் மீ டூ பாடலை கோரஸாக பாடி கின்னஸ் சாதனை படைத்தார்கள்

1600-க்கும் மேற்பட்ட இசை ரசிகர்கள் லவ் மீ டூ பாடலை கோரஸாக பாடி கின்னஸ் சாதனை படைத்தார்கள்

அரை நூற்றாண்டுக்கு முன்னர் வெளியான லவ் மீ டூ என்ற பாடல் மூலம் இசை உலகுக்கு அறிமுகமான பீட்டல்ஸ் இசைக்குழு 1970-களில் பொப் இசை உலகில் புதிய பரிணாமங்களை படைத்தது.

பீட்டல்ஸ் இசைக்குழுவின் 50 ஆண்டுகால புகழைக் கொண்டாடும் அதன் ரசிகர்கள் 1600-க்கும் மேற்பட்டவர்கள் அந்த இசைக்குழுவின் தாய் மண்ணான இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் ஒன்றுகூடி கோரஸில் பாடி புதிய உலக சாதனையை படைத்தார்கள்.

1962 ஒக்டோபர் 5-ம் திகதி வெளியான லவ் மீ டூ பாடலை அதன் ரசிகர்கள் 1631 பேர் சேர்ந்துபாடியது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இன்று பதியப்பட்டது.

இதற்கு முன்னர், Ferris Bueller's Day Off என்ற நகைச்சுவைப் படத்தின் 25-ம் ஆண்டுநிறைவை முன்னிட்டு 2011ம் ஆண்டில் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 897 பேர் சேர்ந்து கோரஸாக பாடி சாதனை படைத்திருந்தார்கள்.

இன்றைய இந்த கோரஸ் சாதனையை படைக்க கனடா, அமெரிக்கா, ஜப்பான் என உலகின் பல பாகங்களில் இருந்தும் இசைப்பிரியர்கள் லிவர்பூல் வந்திருந்தார்கள்.

1960-1970 வரை உலக பொப் இசை வரலாற்றில் கொடிகட்டிப் பறந்த பீட்டல்ஸ் கலைஞர்கள்

1960-1970 வரை உலக பொப் இசை வரலாற்றில் கொடிகட்டிப் பறந்த பீட்டல்ஸ் கலைஞர்கள்

ஜோன் லென்னோன், போல் மெக்கார்ட்னி, ஜோர்ஜ் ஹரிஸன், ரிங்கோ ஸ்டார் என்ற நான்கு இளைஞர்களின் கூட்டு முயற்சியாக 1960களின் தொடக்கத்தில் உருவான பீட்டல்ஸ், இசை உலகில் பழைய வரலாறுகளை புரட்டிபோட்டு ரொக் மற்றும் பொப் இசையில் வர்த்தக ரீதியான வெற்றிகளை அள்ளிக்கொண்டது.

ஆரம்பத்தில் பிரிட்டனுக்குள் மட்டும் பிரகாசித்து வந்தவர்கள் 1964 இல் அமெரிக்க பொப் சந்தைக்குள்ளும் படையெடுத்து சர்வதேச நட்சத்திரங்களாக மின்னினார்கள்.

Rubber Soul (1965), Revolver (1966), Sgt. Pepper's Lonely Hearts Club Band (1967), The Beatles (1968), and Abbey Road (1969) போன்ற பிரபலமான ஆல்பங்களுடன் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தவர்கள், 1970-இல் தனித்தனியாக பிரிந்து தங்களின் இசை வாழ்க்கையை தனித்தனியாக தொடர்ந்தார்கள்.

அமெரிக்காவின் 7 கிராமி விருதுகளை வென்றுள்ள பீட்டல்ஸ் இசைக்குழுவின் பாடல்களுக்கு இன்றளவும், 50 ஆண்டுகள் கடந்தும், உலகெங்கிலும் இசை ரகிகர்கள் இருக்கிறார்கள் என்றால் மிகையில்லை.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.