"செவ்வாயன்று தமிழகத்தில் திரைக்கு வருகிறது தலைவா "

நடிகர் விஜய்யும், அமலா பாலும் நடித்த படம் இது.
Image caption தலைவா படத்தில் நடிகர் விஜய்யும், அமலா பாலும் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் தலைவா படம் ஆகஸ்ட் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் வெளியிடப்படும் என அப்படத்தின் விநியோக நிறுவனமான வேந்தர் ஃபில்ம்ஸ் கூறுகிறது.

படத்தினை வெளியிடுவதற்காக எந்த ஒரு தரப்புடனும் உடன்பாடு எதுவும் எட்டப்பட்டதா என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை.

ஆனால் படம் செவ்வாயன்று திரைக்கு வரும் என விநியோக நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தை திரையிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் வர இப்படம் தமிழகத்தில் மட்டும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்தப் படம் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இப்படத்தின் திருட்டு விசிடிக்கள் புழங்க ஆரம்பித்ததால், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தமிழகத்திலும் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சந்திரகுமார் ஜெயின் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் விதமான காட்சிகளும் வசனங்களும் இத்திரைப்படத்தில் இருப்பதால்தான் இந்தப் படம் வெளியிடப்படுவதற்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டதாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.