இலங்கைத் திரைப்படத்திற்கு இந்தியாவில் விருது

  • 1 மே 2014
நிலேந்திர தேஷப்பிரியவின் தன்ஹா ரதீ ரங்கா

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பின்னர் நடக்கும் நிகழ்வுகளை மையக் கருவாக அமைத்து உருவாக்கப்பட்ட இலங்கைத் திரைப்படத்துக்கு இந்தியாவில் நடக்கும் விருதுவிழா ஒன்றில் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

இலங்கையின் புதுமுக இயக்குநர் நிலேந்திர தேஷப்பிரிய இயக்கிய 'தன்ஹா ரதீ ரங்கா' என்ற படத்திற்கே இந்தியத் தலைநகர் தில்லியில் நடைபெற்ற தாதாசாகேப் பால்கே திரைப்பட விருது விழாவில் விருது கிடைத்துள்ளது.

இந்திய சினிமா உலகின் தந்தையாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே நினைவாக நடத்தப்படும் வருடார்ந்த விருதுப் போட்டியில் பல மொழிகளிலிருந்தும் திரைப்படங்கள் பங்கேற்றுவருகின்றன. தெரிவாகும் திரைப்படங்களுக்கு மொத்தம் 5 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்படுவது வழமை.

இலங்கையின் தற்கால சூழலை சித்தரிக்கும் விதமாக, தமிழ் மற்றும் சிங்கள மொழியில் உருவாக்கப்பட்டுள்ள 'தன்ஹா ரதீ ரங்கா' திரைப்படம் இம்முறை விருதுவிழாவில் சிறந்த படத்துக்கான விருதினை தட்டிக்கொண்டது.

'போரின் பின்னரான சூழல்'

முப்பது ஆண்டுகால போருக்குப் பின்னர் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மூன்று நண்பர்கள் மேற்கொள்ளும் பயணமும் அதனால் விளையும் நிகழ்வுகளும் தான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர் நிலேந்திர தேஷப்பிரிய.

இயக்குநர் நிலேந்திர தேஷப்பிரிய

இலங்கையில் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவையை உணர்த்தும் வகையில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

பல்வேறு திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவம் உள்ள நிலேந்திர தேஷப்பிரிய, பல மேடை நாடகங்களையும், தொலைக்காட்சி நிகழ்சிகளையும் இயக்கியுள்ளார்.

தான் இயக்கிய முதல் திரைப்படத்திற்கே இந்தியாவில் விருது கிடைத்தமை தனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று அவர் கூறினார்.

இந்தியாவில் இலங்கை விவகாரங்களை மையமாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு, பெரும்பான்மையான தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து கேள்வி எழுப்பிய போது, ஒரு திரைப்பட இயக்குனர் என்கிற முறையில் அது சரியான அணுகுமுறை இல்லை என்பேன் என்றார் நிலேந்திர தேஷப்பிரிய.

அத்தோடு இலங்கை விவகாரங்கள் மட்டுமில்லாமல் சர்ச்சைக்குரிய சம்பவங்களை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக்கப்படும் போதெல்லாம் இது போன்ற எதிர்ப்புகள் எழுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கமல்ஹாசன் உருவாக்கிய விஸ்வரூபம், இயக்குனர் மணிரத்னம் உருவாக்கிய பம்பாய், சந்தோஷ் சிவன் இயக்கிய இனம் ஆகிய திரைப்படங்களை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற படங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் கருத்து சுதந்திரத்தை சிதைப்பது போல் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் வாழும் தமிழர்களும் தனது படத்தில் வெளிப்படுத்தும் கருத்தை புரிந்து கொள்வார்கள் என்று நம்புவதாகவும் இயக்குநர் நிலேந்திர தேஷப்பிரிய சுட்டிக்காட்டினார்.