சிரியாவின் சூழலை கண்டிக்க வார்த்தைகள் இல்லை: ஐ.நா. மனித உரிமை ஆணையர்

ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன், தங்களின் விசாரணையாளர்களுக்கு ஒத்துழைக்காத, எண்ணிக்கையில் அதிகரித்து வரும் நாடுகளை விமர்சித்துப் பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption சையத் ராவுத் அல் ஹுசைன்

ஐ.நா மனித உரிமை பேரவையின் சமீபத்திய அமர்வை தொடங்கி வைத்து பேசிய சையத், மருத்துவர் ஒருவரால் தலைமை தாங்கப்படும் நாட்டில் தனது மக்களை தானே விஷ வாயுவை செலுத்திக் கொன்றதாக நம்பப்படும் சூழல் நிலவுவதாக தெரிவித்த அவர், சிரியாவில் நிலவும் சூழ்நிலையை கண்டிக்க வார்த்தைகளால் முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டரை வருடங்களாக தனது பிரதிநிதி ஒருவருக்கு விசா வழங்க மறுக்கும் வெனிசுவேலாவையும் அவர் கண்டித்துள்ளார்.

பெலாரஸ், எரித்ரியா, வட கொரியா மற்றும் இரான் ஆகிய நாடுகளும் அனுமதி மறுக்கும் பட்டியலில் நீண்ட காலமாக உள்ளன.

நாடுகள் ஐ.நா கண்காணிப்பாளர்களுக்கு அனுமதிகளை மறுக்கலாம், ஆனால் அவர்களால், ஐ.நா கண்காணிப்பாளர்கள் பேசுவதைத் தடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.