சிரியாவில் மனிதாபிமான உதவிகளை அளிக்க முடியவில்லை : ஐ.நா.

போர் நிறுத்த உடன்பாடு தொடர்ந்தாலும் கூட, சிரியா முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் குறிப்பாக கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு அலெப்போ பகுதியில், மிகவும் தேவையான மனிதாபிமான உதவிகளை தங்களால் அளிக்க முடியவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு அலெப்போவில் வசிப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

அரசின் பிடியில் உள்ள ஹோம்ஸ் மாகாணத்திற்கு பல லாரிகளில் ரஷ்யாவின் உதவிப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பேசுகையில், சிரியா அரசாங்கம் உதவிப் பொருட்களை அளிக்கும் நடவடிக்கை மீது தனது கட்டுப்பாடும் , கண்காணிப்பும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதுதான் உதவிப்பொருட்கள் கொண்டு சேர்ப்பதை தடுக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் பிபிசி செய்தியாளர் கூறுகையில், பெரிய எண்ணிக்கையில் உள்ள பல கிளர்ச்சியாளர் குழுக்களிடம் இருந்து உதவிப் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டிய உத்தரவாதத்தை பெறுவதற்கான தேவை இருப்பதுதான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டார்.

பின்னர் புதன்கிழமையன்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா, 48 மணிநேர போர் நிறுத்தம் குறித்த தங்களது மதிப்பீட்டை அளிப்பார்கள். மேலும், இந்தப் போர் நிறுத்தம் தொடருமா என்றும் அறிவிக்கப்படும்.