சிரியாவில் அமெரிக்கா - ரஷ்யா கூட்டணி: நட்பா, நாடகமா?

சிரியாவில் மிக முக்கிய தீவிரவாதக் குழுக்களை ஒழித்துக் கட்ட, அமெரிக்கா - ரஷ்யா ஏற்படுத்தியுள்ள கூட்டணியால் யாருக்கு என்ன பலன் ஏற்படும், என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்துகொள்ள முற்படுவதுதான் இந்த சிறிய, எளிய ஆய்வின் நோக்கம். ஆராய்கிறார் பிபிசி அரேபிய சேவையின் ரமி ருஹாயெம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிரிய அலங்கோலத்தின் சின்னம் - ஒம்ரான் தக்னீஷ்

1.உடன்பாடு என்ன?

சிரியா தொடர்பான அமெரிக்க - ரஷ்யா உடன்படிக்கையில், இரண்டு அம்சங்கள் உள்ளன.

முதலில், சிரியா ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே அலெப்போ போன்ற நகரங்களில் போர் நிறுத்தம்.

இரண்டாவது, அமெரிக்கா - ரஷ்யா இடையே, முன்பு அல்-நுஸ்ரா என அறியப்பட்ட இஸ்லாமிக் நாடு ஆகிய கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான கூட்டு ராணுவ நடவடிக்கை.

அமெரிக்காவும், ரஷ்யாவும், இந்த உடன்படிக்கையைப் பயன்படுத்தி, சிரியாவில் சர்வதேச தீவிரவாதிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தப் பயன்படுத்துகின்றன.

இது, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே இந்தப் பிராந்தியத்தில் தாங்கள் கடைபிடித்து வந்த கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடாகக் கருத முடியாது.

கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கும் இந்த முறைக்கும் பல அம்சங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால், கூட்டு ராணுவ நடவடிக்கை என்பது இந்த முறை முக்கிய அம்சமாக உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே, சர்வதேச ஜிகாதிக் குழுவான இஸ்லாமிய நாட்டுக்கு எதிராக தனித்தனியாக கூட்டுப்படை அமைத்து போரிட்டு வருகின்றன.

தற்போது, ஜேஎப்எஸ் உள்பட பல்வேறு குழுக்களுடன் போரை விரிவாக்கவும், நேரடியாக ஒருங்கிணைந்து செயல்படவும் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

2.ஜபாத் ஃபதே அல்-ஷாம் (ஜேஎப்எஸ் )

சிரியா அதிபர் அசாத்துக்கு எதிராகப் போரிடும் சக்தி வாய்ந்த போராளிக் குழுக்களில் முக்கியமானது ஜேஎப்எஸ்.

இது தனியாகப் போரிடுவதில்லை. பல குழுக்கள் இத்துடன் இணைந்து போரிடுகின்றன.

தற்போதைய உடன்படிக்கையின்படி, மற்ற குழுக்கள், ஜேஎப்எஸ்ஸிடமிருந்து விலகியிருக்க வேண்டும். இதன் மூலம், அமெரிக்கா ஆதரவு பெற்ற போராளிக் குழுக்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் ஜேஎப்எஸ் போராளிகளை தீர்த்துக்கட்ட முடியும்.

இந்த ஆண்டின் துவக்கத்தில், அல்-நுஸ்ராஅமைப்பு, தனது பெயரை ஜேஎப்எஸ் என்று மாற்றிக் கொண்டது. அதுமட்டுமன்றி, சிரியாவில் இனிமேல், அல்-கய்தா அங்கீகாரம் பெற்ற குழு அல்ல என்றும் அறிவித்தது. இதன் மூலம் மற்ற குழுக்கள் இதனுடன் எளிதில் இணைந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது.

எதிர்பார்த்தபடி, அந்தக்குழு தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்ய கொள்கைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

படத்தின் காப்புரிமை AP
Image caption இஸ்லாமிய நாடு தீவிரவாதக் குழுவினர்

ஜேஎப்எஸ் உடன் எந்தெந்தக் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன, எந்தெந்தக் குழுக்கள் செயல்படுவதில்லை, எந்தெந்தப் பகுதிகள் ஜேஎப்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன, எவை இல்லை என்பது தொடர்பான குழப்பங்கள்தான் பிப்ரவரி போர் நிறுத்தம் தோல்வியில் முடிவடைய முக்கியக் காரணம்.

இந்த முறை, அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகள் வரைபடத்தைப் பயன்படுத்த உள்ளன. கூட்டு ராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக, அந்தக் குழுக்கள் எப்படிப் பிரிகின்றன என்பதை அவர்கள் கண்காணிக்கப் போகிறார்கள்.

ஜேஎப்எஸ் தற்போது ரஷ்யா - அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மேலும், தங்களுக்கு ஆதரவாக இருந்த போராளிக் குழுக்களும் துப்பாக்கி முனையில் இந்த நாடுகளால் மிரட்டப்படுகிறார்கள்.

ஒன்று, ஜேஎப்எஸ் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் இதன் மூலம் கூட்டு நடவடிக்கையிலிருந்து தப்ப முடியும். அதுமட்டுமன்றி, அந்தப் பிராந்தியத்திலும் தொடர முடியாது.

இல்லாவிட்டால், ஜேஎப்எஸ் உடன் இணைந்து செயல்படலாம். அதன் மூலம், அமெரிக்க - ரஷ்ய கூட்டுத் தாக்குதலுக்கும் இலக்காகலாம்.

3.அதிபர் அசாத்துக்கு இது உதவுமா?

இது அதிபர் அசாத்துக்கு நல்லதாகத்தான் தோன்றுகிறது.

தனது மிகப்பெரிய எதிரி, இப்போது போர்க்களத்தில் உலகப் போரைப் போன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தொடரும் அழிவுகள்

அவரது இன்னொரு பலம் வாய்ந்த எதிரியான இஸ்லாமிக் நாடு, ஏற்கெனவே, இரண்டு சர்வதேசக் குழுக்களிடமிருந்தும் தாக்குதல்களைச் சந்தித்து வருகிறது.

ஆனால், அதிபர் அசாத்தும் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. போர் நிறுத்தம் அமலில் இருப்பதால், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள நிலப்பகுதிகளை மேலும் மீட்டெடுக்கும் நடவடிக்கையைத் தொடர முடியாது. போராளிகளுக்கும் அதே சிக்கல்கள் இருக்கின்றன.

ரஷ்யா தலையிடுவதற்கு முன்னதாக, அசாத் அரசு மிகப்பெரிய சிக்கலில் இருந்தது.

ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து மிகப்பெரிய ஊக்கம் கிடைத்திருந்தாலும் ஆள்பலம் இல்லாமல், புதிய பகுதிகளைப் பிடிக்க முடியாமல் திண்டாடுகிறார்.

4.சிரியாவுக்கு என்ன பலன்?

உலக வல்லரசுகள், அதிபர் அசாத்தின் எதிரிகளை எதிர்த்துப் போரிடுகின்றன என்பதில் புதிய விடயம் இல்லை. இந்த உடன்பாடு, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது.

புதிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றுவதிலும், உறுதியான வெற்றியை அடைவதிலும் இரு தரப்புக்குமே உள்ள தடைக்கற்களை ஏற்படுத்துகின்றன. சிரியாவை மேலும் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள்தான் வலுப்பெற்று வருகின்றன.

இரு தரப்பும் போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு வருவதாலும், அமெரிக்க - ரஷ்ய ராணுவங்களுக்கு இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையின்மை காரணமாகவும், இந்த உடன்படிக்கை எந்த நேரத்திலும் முறிந்து போகலாம்.

ஆனால், கடந்த முறை போர் நிறுத்தம் முறிந்தபோது இருந்த எதார்த்த நிலை, இப்போதும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ரஷ்யாவும் அமெரிக்காவும் சிரியாவில் சுன்னி பிரிவு சர்வதேச ஜிகாதி குழுவுக்கு எதிராக போரிட்டு வருகின்றன.

ரஷ்யாவுக்கு, இந்தப் போரில், அதிபர் அசாத் நேரடிக் கூட்டாளி. அமெரிக்கர்களுக்கு சில நேரம் மறைமுகமான, அங்கீகரிக்கப்படாத கூட்டாளியாக இருக்கிறார். ஆனால், எல்லாமே, கூட்டல் - கழித்தல் கணக்காகத்தான் முடிகிறது. சிரியாவில் இருந்து வந்துகொண்டிருக்கும் தகவல்களும் அப்படித்தான் இருக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்