5 பில்லியன் யூரோ நஷ்டம் ஏற்படுத்திய பிரான்ஸ் வர்த்தகருக்கு ஒரு மில்லியன் யூரோ அபராதம்

2008ல் தனது அதிகாரபூர்வமற்ற பரிவர்த்தனைகள் காரணமாக தனது வங்கிக்கு கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் யூரோ நஷ்டம் ஏற்படுத்திய பிரான்ஸின் ஒரு போக்கிரி வர்த்தகர், அவர் வேலை பார்த்த நிறுவனத்துக்கு ஒரு மில்லியன் யூரோ அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை DOMINIQUE FAGET/AFP/Getty Images
Image caption பிரான்ஸ் வர்த்தகர் ஜெரோம் கெர்வெய்ல் (கோப்புப்படம்)

பாரிசுக்கு அருகில் உள்ள வார்செய் நகரில் உள்ள ஒரு மேல்முறையீடு நீதிமன்றம் சொசைடி ஜெனரல் வங்கிக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு ஒரு பகுதி பொறுப்பாக ஜெரோம் கெர்வெய்ல் இருந்தார் என்று தெரிவித்துள்ளது.

வங்கியிடம் உறுதியான கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் அந்த வங்கியும் ஐந்தரை பில்லியன் டாலர் பணத்திற்கு இணையான நஷ்டம் ஏற்பட காரணமாக இருந்ததாக, ஏறக்குறைய வெளிப்படையாக, ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்று பிபிசியின் பாரிஸ் செய்தியாளர் கூறுகிறார்.

2010ல் கெர்வெய்லுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அதில் இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.