தயார் மாஸ்டர் வழக்கு விசாரணை நவம்பருக்கு ஒத்திவைப்பு

Image caption வவுனியா நீதிமன்றம் முன்பு, தயா மாஸ்டர் மற்றும் வழக்கறிஞர் சுமந்திரன்

விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப் பகிர்வுப் பத்திரம் சட்ட வலுவற்றது. எனவே, அந்த விதிகள் சட்ட வலுவற்றது என தீர்ப்பளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என விடுத்த வேண்டுகோளை பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இந்த வழக்கை நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தினார் எனக் குற்றம் சுமத்தி தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு காலாவதியாகியுள்ள அவசரகால விதிகளின் கீழ் இந்த வழக்கில் பகிரப்பட்டுள்ள குற்றப்பத்திரம் சட்ட வலுவற்றது என வாதாடினார்.

இந்த அவசரகால விதிகள் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5 ஆம் பிpரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியவையாக அமைந்திருக்கின்றன. அதனால் இந்த விதிமுறைகள் சட்ட ரீதியான விதிமுறைகள் அல்ல என நீதிமன்றங்களில் நடைபெற்ற சில வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டு, அதன் அடிப்படையில் தீரப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எனவே கடந்த 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு நான்கு நாலரை வருடங்களில் செயலிழந்து போன அவசர கால விதிகளின் கீழ், அவைகள் செயற்று 5 வருடங்கள் கடந்த நிலையில் அவற்றை அடிப்படையாகக் கொண்ட குற்றப்பத்திரம் சட்ட வலுவற்றது என தீர்ப்பளித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள தயா மாஸ்டரை விடுதலை செய்ய வேண்டும் என சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.

ஆயினும் சட்டரீதியான முறையிலேயே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அரச தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அசாத் நவாவி வாதிட்டார்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரம் சட்ட வலுவற்றது என தீர்ப்பளிப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய வேண்டியிருப்பதாகத் தெரிவித்த நீதிபதி இரு தரப்பு சட்டத்தரணிகளையும் எழுத்து மூலமாகத் தமது சமர்ப்பணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கை நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்