ஆப்கானிஸ்தான் வான் வழி தாக்குதலில் பொது மக்கள் கொல்லப்பட்டனரா?

அமெரிக்கா நடத்திய வான் வழித் தாக்குதலில், 13 பேர் கொல்லப்பட்டதாக கிழக்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிகழும் வான் வழி தாக்குதல்கள் ( கோப்புப் படம்)

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாத அமைப்புக்கு விசுவாசமானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட தீவிரவாதிகளை இலக்கு வைத்து பாகிஸ்தானுக்கு அருகேயுள்ள நாங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பொது மக்களும் அடங்குவர் என்று சில உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஹஜ் புனித யாத்திரை சென்று நாடு திரும்பியுள்ள மலை வாழ் சமூகத்தை ஒரு முதியவரை வரவேற்க, தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டின் அருகே ஒரு கூட்டம் கூடியிருந்ததாக இச்சம்பவம் குறித்து உள்ளூர் தலைவர்கள் கூறினர்.

இத்தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து உறுதி செய்த அமெரிக்க ராணுவம், இந்த தாக்குதலில் பொது மக்கள் கொல்லப்பட்டார்களா என்பது குறித்து தாங்கள் விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்