10,000 பணியிடங்களை வெட்டப் போவதாக ஜெர்மனிய வங்கி அறிவிப்பு

ஜெர்மனியின் இரண்டாவது பெரிய வங்கியான கோமேர்ட்ஸ் வங்கி ஏறக்குறைய 10,000 பணியிடங்களை வெட்டப் போவதாகவும், தனது பங்குதாரர்களுக்கு தர வேண்டிய லாபப் பங்கு தொகையை மிகப்பெரிய மறு சீரமைப்புக்காக தேவைப்படும் செலவுக்காக நிறுத்தி வைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP

இந்த திட்டத்திற்கு 1.2 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.

முதலீட்டு வங்கி நடவடிக்கைகளை சுருக்கும் போது தனியார் மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களின் மீது கவனம் செலுத்தப்போவதாகவும் கோமேர்ட்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள பிற ஜெர்மனிய வங்கிகளை போல, குறைந்த வட்டி விகிதம் கடுமையான ஒழுங்குமுறை விதிகள் மற்றும் தீவிரமான போட்டி ஆகியவற்றால் கோமேர்ட்ஸ் வங்கி போராடிக் கொண்டிருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான டாய்ச்செ வங்கிக்கு 2008 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் பங்கிருப்பதாக கருதி, 14 பில்லியன் டாலர்களை அபராதமாக விதித்துள்ளது, அமெரிக்க நீதித்துறை.

இந்த வருடம் டாய்ச்செ வங்கியின் பங்குகள் ஐம்பது சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்