ஃபார்க் சமாதான உடன்படிக்கைக்கு ஏன் கொலம்பிய மக்கள் ஆதரவளிக்கவில்லை?

ஃபார்க் கொரில்லாக்கள் உடனான சமாதான உடன்படிக்கை தொடர்பாக நடைபெற்ற தேசிய கருத்தறியும் வாக்கெடுப்பில், வெறும் 60,000 வாக்குகள்  வித்தியாசத்தில் இந்த உடன்படிக்கையை கொலம்பியர்கள் நிராகரித்துள்ளனர். ஏன் கொலம்பியர்கள் இந்த உடன்படிக்கையை நிராகரித்தார்கள் என்பது குறித்த காரணங்களை அலசி ஆராய்கிறது இந்த கட்டுரை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெறும் 60,000 வாக்குகள்  வித்தியாசத்தில் இந்த உடன்படிக்கையை கொலம்பியர்கள் நிராகரித்துள்ளனர்

2 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கிய மற்றும் அரை நூற்றாண்டு காலமாக நீடித்த வந்த ஆயுத மோதலை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தை ஒரு நாடு நிராகரிப்பது எப்படி சாத்தியமாகும்?

இது கேட்பதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால், கடந்த ஞாயிறன்று கொலம்பியாவில் இதுதான் நடந்தது.

கொலம்பிய அரசாங்கத்திற்கும் மற்றும் ஃபார்க் குழுவினருக்கும் இடையேயான அமைதி உடன்படிக்கை தொடர்பாக நடைபெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பில், மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில்'உடன்படிக்கை வேண்டாம்' என்ற குரலே ஜெயித்தது.

கொலம்பியாவில் நடைபெற்று வந்த போரை முடிவுக்கு வருவதை வரவேற்க உலகம் தயாராகிக் கொண்டிருந்த போது, ஆயுத குழுவினருடன்  சமாதான உடன்பாட்டை எட்டுவது என்பது முன்பை நினைத்தைவிட மிக கடினமானதாக இருக்கும் என்று இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் காட்டுகின்றன.  

99.98% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 50.21% வாக்குகள் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 49.78% வாக்குகள் உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவாகி இருந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் கியூபாவின் ஹவானாவில் 2012 ஆம் ஆண்டில் தொடங்கியது.

இந்த சமாதான முயற்சிகள் சர்வதேச அளவில் ஏற்படுத்திய உற்சாகத்தை கொலம்பியாவிற்குள் ஏற்படுத்தவில்லை, அதனால்தான் ஞாயிறன்று நடைபெற்ற தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு சதவிகிதம் பதிவாகி உள்ளது. கடந்த தசாப்தங்களில் பதிவான மோசமான வாக்குப்பதிவு எண்ணிக்கை இது. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 63% பேர் தேர்தலில் இருந்து விலகியிருந்தார்கள்.

வாக்கெடுப்பில் கலந்து கொண்ட பலரும் கொலம்பியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க கடந்த காலத்தை திரும்பி பார்த்துள்ளனர்.

வாக்கெடுப்பில் ஏன் 'உடன்படிக்கை வேண்டாம்' என்ற தரப்பு ஜெயித்தது?

கொலம்பிய வாக்காளர்களிடம் பிபிசி பேசியபோது ஒரு கருத்து பலரிடமிருந்து அடிக்கடி வெளிவந்தது. ஃபார்க் குழுவினருடான போரில் ஏற்பட்ட உளரீதியான காயங்கள் இன்னும் ஆராத ரணமாக அவர்களிடம் மனதில் இருந்தது.

சமாதான நடைமுறைகளின் போது, மன்னிப்பு என்பது அதிகளவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 50 ஆண்டு கால கொடுமை மற்றும் வன்முறைகளை மன்னிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

பயம் அல்லது நீதி?

6.5 மில்லியன் கொலம்பியர்கள் இந்த சமாதான உடன்படிக்கையை எதிர்த்து வாக்களித்துள்ளனர். இந்த உடன்படிக்கையை எட்ட கியூபாவில் உள்ள ஹவானாவில் சுமார் நான்கு ஆண்டுகள் முயற்சிகள் நடந்தன.

கொலம்பியா நாட்டில் உள்ள வாக்காளர்களின் மனதில் உள்ள பயத்தின் வெற்றி என்கிறார் பல்கலைக்கழக பேராசிரியரும், பத்திரிகையாளருமான ஆனா கிருஸ்டினா ரெஸ்ட்ரெப்போ.

'இதுகுறித்த ஒரு அடியை எடுத்து வைக்கும் திறன் எங்களிடம் இல்லை' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

'1982 ஆம் ஆண்டு இருந்த நிலைக்கே திரும்பிவிட்டோம். அப்போதுதான், ஃபார்க் குழுவினருடன் முதற்கட்டமாக பேச்சுவார்த்தைகள் துவங்கின'

எனினும், இந்த உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்தவர்கள், 'நீதிக்கு கிடைத்த வெற்றி' என இதை நம்புகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உடன்படிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்தவர்கள் முடிவுகள் குறித்து கேட்பதற்காக பொது இடங்களில் கூடியிருந்தனர்

'பல ஆண்டுகளாக நடைபெற்ற போரின் வலியை நாடு மறக்கவில்லை என்பதை காட்டுவதாக முடிவுகள் அமைந்திருக்கிறது' என்று போகோட்டாவில் வாழும் கணக்காளர் மெர்சிடெஸ் காஸ்டநேடா கருத்து தெரிவித்துள்ளார்.  

மேலும், கடத்தல், கொலை மற்றும் போதை பொருள் கடத்தல் என ஃபார்க் குழுவின் பாதையானது இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

''கொலம்பியா இதனை மறக்கவில்லை''

சமாதானம் வேண்டாம்?

'மோதலை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி உடன்பாட்டிற்கும், நிலையான மற்றும் நீடித்த சமாதான கட்டமைப்பிற்கும் உங்கள் ஆதரவு உள்ளதா?' என்று கடந்த ஞாயிறு நடைபெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்கெடுத்த வாக்காளர்களிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

இது ஒரு எளிய யுத்த நிறுத்தம் குறித்த சாதாரண கேள்வி அல்ல.

பல்வேறு குறிப்புகளுடன் 297 பக்கங்களை கொண்ட ஹவானா ஒப்பந்தம், பொதுமக்கள் கருத்து மற்றும் கொலம்பிய அரசியல்வாதிகள் ஆகிய இருவரையும் பிரிக்கிறது.

அந்த ஒப்பந்தத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்று, அரசியல் கட்சியாக ஃபார்க் மாறிய உடன், செனட் சபையில் ஐந்து இடங்களும், நாடாளுமன்றத்தில் ஐந்து இடங்களும் அடுத்த இரண்டு சட்டமன்ற காலங்களுக்கு வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ஒப்பந்தத்தில் இடம்பெற்ற தகவல்கள் குறித்து ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த சமாதான உடன்படிக்கையை நிராகரித்ததன் மூலம், கொலம்பியர்கள் மீண்டும் போரை தொடர வேண்டும் என்று விரும்பவில்லை.

இதைத்தான், உடன்படிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்கள்.

1998 ஆம் ஆண்டிலிருந்து 2002 வரை கொலம்பியாவில் ஆண்ட்ரெஸ் பேஸ்ட்ரானா ஆட்சியின் போது, அரசாங்கம் மற்றும் ஃபார்க் குழுவினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட விக்டர் ஜி ரிக்கார்டோ, 'கருத்தறியும் வாக்கெடுப்பில் உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்தவர்கள் அமைதியை விரும்பவில்லை என்று அர்த்தமில்லை. அதை அவ்வாறு புரிந்து கொள்ள கூடாது. பலமான ஆதரவோடு இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரும் புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது ஒரு பெரிய ஆச்சரியமில்லை

கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று, கார்டாகேனாவில் உலகத் தலைவர்கள் முன்னிலையில், கொலம்பியா அதிபர் யுவான் மானுவல் சாண்டோஸ் மற்றும் ஃபார்க் குழுவின் தலைவர் ரொட்ரிகோ லொண்டோன்யோ ஆகிய இருவரும் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

'போருக்கு முடிவு' என்று வந்த அறிவிப்பில் இருந்த உற்சாகம்,  ஏதோ அந்த ஒப்பந்தத்துக்கு ஞாயிறன்று நடந்த வாக்கெடுப்பில் ஆதரவு கிடைத்துவிடும் என்று கோடிகாட்டியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 38% குறைவான வாக்காளர்கள் வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர்

ஆனால், இந்த உடன்படிக்கை வேண்டாம் என்று வாக்குகள் பதிவானது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆனா கிருஸ்டினா ரெஸ்ட்ரெப்போ தெரிவித்துள்ளார்.

மோதல் நடைபெற்றது கிராமப்புற பகுதிகளில் ஆனால் பெரும்பாலான வாக்காளர்கள் நகரங்களில் வாழ்ந்ததாக அவர் விளக்கினார்.

மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், இந்த உடன்படிக்கை வேண்டாம் என பிரச்சாரம் மேற்கொண்டவரான ஆல்வரோ, ஆன்டியோக்கியா உட்பட சில பகுதிகளில் உள்ள தன் பலமான வாக்கு வங்கியை சாதகமாக பயன்படுத்தி கொண்டதாக கூறினார்.   

கொலம்பியாவில் உள்ள பிபிசி செய்தியாளர், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் என்பது யூகிக்கக்கூடிய விஷயம்தான், ஆனால் அதை  கொலம்பியாவின் கரிபியன் பகுதியில் தாக்கிய புயல் மேலும் மோசமாக்கியது என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 52 ஆண்டுகளாக இந்த ஆயுத மோதல் நீடித்து வந்தது.

38% குறைவான வாக்காளர்கள் வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர்.

60,000க்கும் குறைவான வாக்குகளால் கருத்தறியும் வாக்கெடுப்பில் சமாதான உடன்படிக்கை வேண்டாம் என்றவர்களின் கருத்து வெற்றி பெற்றுள்ளது. 

'எங்களுக்கு அமைதி வேண்டும் என்றுதான் என்று பிபிசி முண்டோக்கு பேட்டியளித்த அனைவரும் தெரிவித்துள்ளனர்.  

 ஆனால், ஞாயிறன்று நடந்த வாக்கெடுப்பின் முடிவுகள் இந்த அமைதி ஒப்பந்தத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து, நாடு, அமைதி ஒப்பந்தம் குறித்து காட்டிய கருத்து வேறுபாடுகளைப் போலவே, பிரிந்தே கிடக்கிறது என்று காட்டுகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்