சிரியாவில் ஐ.நா. மூலம் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பிரான்ஸ், ஸ்பெயின் முயற்சி

அமெரிக்காவும் ரஷியாவும் சிரியா போர் நிறுத்தம் தொடர்பாக ஏற்படுத்திய ஒப்பந்தம் கசப்புடன் முறிந்ததை அடுத்து, ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் மூலம் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அரசுகள் முயன்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை SAMEER AL-DOUMY/AFP/Getty Images
Image caption சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரில் பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். (கோப்புப்படம்)

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் வான் பகுதியில் ராணுவ விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிப்பது உள்ளிட்ட திட்டங்கள், புதிய முயற்சிகளில் அடங்கும்.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போவின் கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட இரண்டை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அரசு மற்றும் ரஷ்யாவின் விமானத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

போர்நிறுத்த கண்காணிப்பாளரை ஐ.நா. நியமிக்கும் திட்டத்துக்கும் ரஷியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

திங்களன்று அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது. அதற்குக் காரணம் என்று இருதரப்பும் பரஸ்பரம் கடுமையாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன.