லிபிய கடற்பகுதியில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான குடியேறிகள் மீட்பு: இத்தாலிய கடலோரக் காவல்படை

லிபிய கடற்பகுதியில் இரண்டாவது நாளாகச் செவ்வாய்க்கிழமை அன்று நடந்த தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் மீட்கப்பட்டனர் என்று இத்தாலிய கடலோரக் காவல்படை கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை ARIS MESSINIS/AFP/Getty Image
Image caption லிபிய கடற்பகுதியில் நடந்த மீட்பு பணியில் ஆயிரக்கணக்கான குடியேறிகளை இத்தாலிய கடலோரக் காவல்படையினர் மீட்டனர்.

இருபத்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலானோரை ஏற்றிச் சென்ற ஒரு மரப்படகில் குறைந்தது 22 பேர் இறந்து போனதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு புகைப்படக்காரர் அவர்கள் மூச்சுத்திணறி இறந்தது போலத் தோன்றுகிறது என்றார்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.

அகதிகளைக் கடத்துபவர்கள், அமைதியான வானிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் அதனால் இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை புதிய அளவில் அதிகரித்துள்ளது என்றும் நம்பப்படுகிறது.