போலந்தில் கருக்கலைப்பை தடை செய்யும் சட்ட மசோதா நிராகரிப்பு

கருக்கலைப்பு மீது தடை மற்றும் கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு சிறை ஆகிய அறிவிப்புகள் அடங்கிய ஒரு சட்ட வரைவை போலந்து நாடாளுமன்றத்தின் கீழவை நிராகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption போலந்தில் கருக்கலைப்பை தடை செய்யும் சட்ட மசோதாவிற்கு எதிராக போரட்டம் நடத்திய பெண்கள்

கடந்த ஓர் ஆண்டாக அதிகாரத்தில் இருக்கும், போலந்தின் சட்டம் மற்றும் நீதிக் கட்சிக்கு முதல் முறையாக உள்நாட்டில் நேரிட்ட பெரிய பின்னடைவு இதுவாகும்.

இந்தச் சட்ட வரைவுக்கு எதிராக, திங்களன்று தேசிய அளவில், ஆயிரக்கணக்காகப் பெண்கள் பங்குகொண்டதாகக் கூறப்படும் போராட்டத்தை அடுத்து, அமைச்சர்கள் இந்தச் சட்ட மசோதாவிற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விலகிக் கொண்டனர்.

இந்த சட்ட மசோதாவை, கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவு கொண்ட, கருக்கலைப்புக்கு எதிரான ஒரு குடிமக்கள் அமைப்பு 4.5 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று கொண்டு வந்தது.