நீஜேரில் அகதிகள் முகாமை தாக்கிய இஸ்லாமியவாத துப்பாக்கிதாரிகள்

மேற்கு ஆப்பிரிக்காவில், நீஜேரில்,மாலியின் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு அகதிகள் முகாமை இஸ்லாமியவாத துப்பாக்கிதாரிகள் தாக்கியுள்ளனர்.

டசாரா பகுதியில் உள்ள டாசிலிடில் நடந்த இந்தத் தாக்குதலில், அகதிகள் முகமை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த படையினரில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் என்று நீஜேரின் பிரதமர் பிரிகி ராஃபினி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாலியில் இருந்து வந்த அகதிகள் இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமில் தனது பணியாளர்களை வைத்திருக்கும் ஐ.நா.அகதிகள் முகமை இந்தத் தாக்குதலை உறுதி செய்தது.

வியாழனன்று, ஒரு டஜன் வண்டிகளில் ஜிகாதி தீவிரவாதிகள் அங்கு வந்தனர் என்றும் பின்னர் அவர்கள் 200கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் உள்ள மாலியின் எல்லை பகுதிக்கு சென்றனர் என்றும் ஐநா அகதிகள் நிறுவனம் கூறியது.

நீஜேர் அரச படையினர் அவர்களைத் துரத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.