அலெப்போவில் பொது மக்கள் வெளியேற குறைந்த கால போர் நிறுத்தம்

சிரியா நகரான அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக, அதன் மீதான தாக்குதலை, ரஷியா மற்றும் சிரிய படைகள் ஒன்று சேர்ந்து குறைவான காலத்திற்கு அதிகாரபூர்வமாக நிறுத்தியுள்ளன.

Image caption அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் பகுதியில் காட்சியளிக்கும் சேதமடைந்த கட்டடங்கள்

துப்பாகிச் சூடுகள் நடந்ததாக சில அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், செவ்வாய்க்கிழமையிலிருந்து அங்கு அமைதி நிலவுவதாக ஐ.நா அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் எந்த வித வான் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், அதே மாதிரி அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஐ.நாவின் மனித உரிமைக்கான உயர் ஆணையர் மத்தியாஸ் பென்கே, நகரைவிட்டு யாரும் சென்றதாக தெரியவில்லை என்றும், உதவி விநியோகம் இதுவரை நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்கள் குழு அங்கு தொடர்ந்து சண்டையிடப்போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்