வர்த்தக கொள்கைகள் முன்னிலை பெற்ற ஐரோப்பிய ஒன்றிய மாநாடு பிரஸ்ஸல்ஸில் நிறைவு

நிகழ்ச்சிநிரலில் வர்த்தக கொள்கைகள் பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்த ஒரு உச்சி மாநாட்டை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் நிறைவு செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பெல்ஜியத்தின் ஒரு பகுதியான வாலோனியாவின் நாடாளுமன்றம், தனியாக இந்த வர்த்தக ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்தி வருகிறது

கனடாவோடு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான எந்தவொரு தீர்மானமும் இன்னும் எட்டப்படவில்லை; ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்று ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜாங் குளோடு யுங்கர் தெரிவித்திருக்கிறார்.

(பெல்ஜியத்தின் ஐந்து நிரந்தர நாடாளுமன்றங்களில் ஒன்றான) வாலோனியன் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போகும் நிலையில் உள்ளது.

பின்னர் யுங்கர், பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயை சந்திக்கவுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் உண்மையிலே வெளியேறும் வரை, அதன் முடிவெடுக்கும் எல்லா நிலைகளிலும், பிரிட்டன் முழுமையாக பங்கேற்கும் என்று தெரீசா மே தெரிவித்தார்.

உறுப்பினர் நிலையில் இருந்து விலக விரும்புகிற ஒரு நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முயல்வது சரியல்ல என்று ஐரோப்பாவின் மூத்த தலைவர்கள் பலர் தெரிவித்திருக்கின்றனர்.