ஹேய்டி சிறையிலிருந்து 170 கைதிகள் தப்பியோட்டம்

ஹேய்டியின் தலைநகர் போர்ட்டோ பிரின்ஸிலிருந்து சுமார் 45கிமீ தூரத்தில் இருக்கும் அர்கஹயிலி சிறையிலிருந்து 170 கைதிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அர்கஹயிலி சிறை ஹேய்டி தலைநகரிலிருந்து 45கிமீ தூரத்தில் உள்ளது

தப்பித்துச் சென்ற கைதிகள், சில ஆய்தங்களையும் திருடிச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இருதரப்புக்கும் நடந்த சண்டையில், ஒரு காவலாளியும், ஒரு கைதியும் கொல்லப்பட்டுள்ளனர். தங்கள் நாட்டில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் ஐ.நாவின் அமைதி காப்பாளர்களின் உதவியுடன், தப்பியோடியவர்களை தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

சிறைக்கலகம் என்று அரசால் விவரிக்கப்படும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து, ஹேய்டி அரசு டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளது.

ஹேய்டி சிறைகள் அச்சுறுத்தும் வகையில் அதிக கூட்ட நெரிசல் கொண்டவையாக உள்ளன; மேலும் அங்குள்ளவர்கள் விசாரணை கைதிகளாக பல வருடங்களை சிறையில் கழிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.