வசைச் சொல் பயன்படுத்தாதே - டுடெர்டேயை கடவுள் எச்சரித்தாராம்

வசவுச் சொற்களைப் பயன்படுத்துவதில் பிரபலமான, பிலிப்பைன்ஸ் அதிபர் ரொடரிகோ டுடெர்டே , தான் இனி அது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்று கடவுளிடம் உறுதி மொழி கொடுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை KIMIMASA MAYAMA
Image caption கடவுள் எச்சரிக்கை - வசைச் சொற்களைப் பயன்படுத்தினால் ....!

ஜப்பானிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது, கடவுள் அவரிடம் இந்தப் பிரச்சனை பற்றி ஒரு கெடு விதித்தார் என்று தனது சொந்த நகரான டவாவோவில் பேசிய டுடெர்டே கூறினார்.

`` வசைச் சொற்களைப் பயன்படுத்துவதை நிறுத்து, இல்லாவிட்டால் இந்த விமானம் நடுவானில் சிதறிவெடித்துவிடும் என்று என்னிடம் ஒரு அசரீரி கூறியது ; எனவே இந்தக் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வது என்று உறுதிமொழி தந்தேன்``, என்று அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

தான் `` கொச்சை வார்த்தைகளையோ, அல்லது சபிக்கும் வார்த்தைகள் போன்றவற்றையோ பயன்படுத்தமாட்டேன் என்று கடவுளுக்கு உறுதிமொழி அளித்துவிட்டதாகவும், கடவுளிடம் கொடுத்த உறுதிமொழி, பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழியாகும்``, என்றும் டுடெர்டே கூறினார்.

பொதுவாக மேலை நாடுகளைப் பற்றி டுடெர்டே வெளிப்படையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, உள்நாட்டில் அவரது பிரபல்யத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் ``வேசை மகன்`` என்று சாடினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை ``போலித்தனம் மிகுந்த`` அமைப்பு என்று கூறினார்.

தன்னை ஹிட்லருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொண்ட அவர், போதைப் பொருளுக்கு அடிமையான 30 லட்சம் பேரை தான் மகிழ்ச்சியுடன் கொல்ல முடியும் என்றும் கூறினார்.

ஐநா மன்றத்திலிருந்து வெளியேறப்போவதாகவும் அச்சுறுத்தினார்.

இவையெல்லாமே, போதைப் பொருட்களுக்கு எதிரான அவரது ரத்தக்களறி மிகுந்த நடவடிக்கைகள் குறிஒத்து எழுந்த விமர்சனங்களுக்கு அவரது பதிலாக வந்தன.

’உறுதிமொழி வரம்புக்குள்தான் ?‘

இந்த நடவடிக்கையில் பல ஆயிரக்கணக்கான போதைப் பொருள் கடத்துபவர்கள் என்று சொல்லப்படுவோரும் பயன்படுத்துவோரும் போலிசாராலும், கண்காணிப்புக் குழுக்களாலும் கொல்லப்பட்டனர்.

ஆனால் அவரது இந்த உறுதிமொழி ஒரு வரம்புக்குள்தான் இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அவரது அரசியல் எதிரியும் செனட்டருமான, லெய்லா டெ லிமா போன்றவர்களைப் பற்றி அவர் பேசும்போது, இதே போன்ற வசைச்சொற்களைப் பயன்படுத்துவாரா மாட்டாரா என்பது சந்தர்ப்பத்தைப் பொறுத்தே அமையும் என்று அவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

பெரும்பாலான பிலிப்பைன்ஸ் மக்களைப் போல, டுடெர்டேயும், ஒரு ரோமன் கத்தோலிக்கர். பெண்ணுறவை அனுபவிப்பதைப் பற்றி அவர் பெருமையடித்துக்கொண்டிருக்கிறார். போப்பாண்டவரையும் அவருடைய விஜயத்தின் போது, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்காக, ``வேசை மகன்`` என்று ஏசியிருக்கிறார்.

சிறு வயதில் ஒரு அமெரிக்க பாதிரியாரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஒரு முறை கூறிய பிலிப்பைன்ஸ் அதிபர், இந்த சம்பவம் தனது அரசியல் கருத்துக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் கூறியிருக்கிறார்.

பிலிப்பைன்ஸ், அதன் நீண்ட கால கூட்டாளியான அமெரிக்காவிடமிருந்து பிரிய வேண்டும், என்று விரும்புவதாக அவர் சமீபத்தில் கூறியிருந்தார். அமெரிக்க படைகள் பிலிப்பைன்ஸிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியேற வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.