அலெப்போ நிகழ்வுகளை திரித்து கூறுகிறது மேற்குலகு - ரஷ்யா குற்றச்சாட்டு

அலெப்போவில் நிகழ்கின்ற குறிப்பாக, மனிதநேய நிலைமைகள் பற்றிய வெறித்தனமான பொய்ப் பிரசாரம் என்று அவர் வர்ணிக்கும் பிரசாரத்தை மேற்குலகு மேற்கொள்வதாக ரஷ்ய வெளியுறுவு அமைச்சர் சர்கெ லாவ்ரோஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image caption இட்லிப் மாகாணத்தில் 20 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்ட குண்டு தாக்குதலுக்கு நியாமற்ற முறையில் ரஷ்யா மீது பழி போடப்பட்டுள்ளது சர்கெ லாவ்ரோஃப் தெரிவிப்பு

அமெரிக்க ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள், போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறியிருப்பதாகவும், நிவாரணப் பணிகளுக்கு முட்டுக்கட்டயாய் இருப்பதாகவும் கூறியிருக்கும் லாவ்ரோஃப், ஐக்கிய நாடுகள் அவையின் உதவி பணியாளர்கள் தொழில்முறையின்றி செயல்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இட்லிப் மாகாணத்தில் 20 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்ட குண்டு தாக்குதலுக்கு நியாமற்ற முறையில் ரஷ்யா மீது பழி போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா மற்றும் சிரியா மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அவருடைய இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

இவ்விரு நாடுகளும் போர் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று பிரிட்டனும், அமெரிக்காவும் கூறுகின்றன.

சிரியா மற்றும் இரான் வெளியுறவு அமைச்சர்களோடு மாஸ்கோவில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் லாவ்ரோஃப் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இராக்கிலுள்ள மொசூல் நகரத்தில் இருந்து இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை விரட்டி சிரியாவுக்கு அனுப்பி, சிரியாவின் அரசுக்கு எதிராக போரிட வைக்க மேற்குலக நாடுகள் விரும்புவதாக சிரியாவின் வெளியுறவு அமைச்சர் வாலிட் அல்-மௌலம் குற்றம் சாட்டியிருக்கிறார்,

தீவிரவாதிகள் அவ்வாறு செய்வதிலிருந்து தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று லாவ்ரோஃப் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்