இத்தாலியின் மத்தியில் மீண்டும் நிலநடுக்கம், 9 பேர் காயம்

இத்தாலியின் மத்திய பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏறக்குறைய 300 பேர் நிலநடுக்கத்தால் பலியான பகுதிக்கு மிக அருகேயுள்ள இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை @monksofnorcia
Image caption நோர்சியாவிலுள்ள புனித பென்னடிக்ட் பேராலயம் இடிந்து விழும்போது, கன்னியாஸ்திரிகள் பேராலயத்திற்கு வெளியே ஓடிவிட்டதாக தெரிகிறது

1980 ஆம் ஆண்டிற்கு பிறகு இத்தாலியில் மிகவும் வலுவானதாக இருக்கின்ற தற்போதைய இந்த நிலநடுக்கத்தின் அளவை 6.5 என்று நிலநடுக்க ஆய்வாளர்கள் குறித்துள்ளனர்.

ஒன்பது பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கும் உறுதி செய்யப்படாத அறிக்கை, யாரும் இறக்கவில்லை என்று குறிப்பிடுகிறது. பெருமளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.

தன்னை சுற்றியிருந்த எல்லாம் இடிந்து விழுகின்றபோது, நரகத்தின் காட்சியை கண்டதாக உசித்தா நகரின் மேயர் மார்க்கோ ரினால்டி கூறியிருக்கிறார்.

நோர்ஷியாவில் இடைக்கால புனித பென்னடிக் பேராலயத்தை இந்த நிலநடுக்கம் அழித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பெரும் அழிவுக்குள்ளான அமித்ரைஸில் புனித அகஸ்டினோ தேவாலயத்தின் கோபுரம் இடிந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தொடக்கம், வட பகுதியில் இருக்கின்ற அல்டோ அடிஜ்க்கு தெற்கில் அமைந்திருக்கும் புக்லியாவில் காலை 7.40-க்கு உணரப்பட்டது.

இந்த பகுதியில் 6.1 என்ற அளவு நிலநடுக்கம் நிகழ்ந்து 5 நாள்களே கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்