நிலநடுக்க பாதிப்பு : இத்தாலியில் மறு கட்டுமான பணிகளுக்கு ஒன்பது பில்லியன் டாலர் செலவாகும் : இத்தாலிய அதிகாரிகள்

மத்திய இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிப்புக்கு உள்ளன நகரங்கள் மற்றும் கிராமங்களை மறுகட்டுமானம் செய்வதற்கு சுமார் ஒன்பது பில்லியன் டாலர் செலவாகும் என இத்தாலிய அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பழுது பார்த்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், கப்பல் கொள்கலன்கள் தற்காலிகத் தங்குமிடங்களாக பயன்படுத்தப்படும் என்றும் ஆனால் முடிந்த அளவு குறைந்த காலத்திற்கு மட்டும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர்கள் மற்றும் பிராந்திய தலைவர்களோடு நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு, பிரதமர் மேட்டியோ ரென்சி தெரிவித்துள்ளார்.

நோர்சியா பகுதியில் உள்ள தேவாலயங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் எனவும் ரென்சி உறுதியளித்துள்ளார். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் நோர்சியா ஒன்றாகும். அதன் தேவாலயங்கள் இல்லாமல் இருந்தால், நோர்சியா தனது குணாதிசயத் தன்மையை இழந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.

உணவு மற்றும் தற்காலிக தங்கும் வசதி போன்றவற்றை குறைந்தது 40,000 பேருக்கு அளித்து தாங்கள் உதவி வருவதாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்