இரானின் முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞருக்கு 135 சவுக்கடிகள் தண்டனை

இரானில், முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் ஒருவர், மோசடி செய்ததாகவும் பொது நிதியை வீணடித்ததாகவும் சுமத்தப்பட்ட குற்றத்திற்கு அவருக்கு 135 சவுக்கடிகள் தண்டனை வழங்கத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முன்னாள் தலைமை அரச வழக்கறிஞர் சயித் மோர்டாஸாவி

முன்னாள் கடும்போக்கு அதிபர் மகமத் அகமதினிஜாத்தின் கூட்டாளியான சயித் மோர்டாஸாவி, 2012 ஆம் ஆண்டு இரானின் நலத்திட்டப் பொறுப்பாளாராக இருந்த போது இந்த குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆறு வருட காலம் தலைமை அரசு வழக்கறிஞராக அவர் இருந்த சமயத்தில், டஜன் கணக்கான சீர்திருத்த பத்திரிகைகளை மூடியதற்காகவும் மற்றும் பத்திரிக்கையாளர்களை சிறையில் அடைத்ததற்காகவும், இரானிய சீர்திருத்தவாதிகள் மத்தியில் வெறுப்பை பெற்றிருந்தார்.

அவர் வழக்கறிஞராக இருந்த சமயத்தில், மனித உரிமை மீறல் குற்றங்கள் புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க பொருளாதார தடைகளால் அவர் இலக்கு வைக்கப்பட்டார்.