தெற்கு சீனாவில் வாகன முகப்பு விளக்குகளை அதிகமாக பிரகாசிக்கவிட்டு சென்றால் இதுதான் தண்டனை

தெற்கு சீனாவில் சாலையில் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளை அதிகமாக பிரகாசிக்கவிட்டு, சாலையில் செல்லும் மற்றவர்களின் பார்வைத் திறனை குறைக்க செய்யும் ஓட்டுநர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா ?

ஒரு நிமிடத்திற்கு அதே போன்ற பிரகாசமான விளக்குகளை அவர்கள் உற்றுப் பார்க்க வேண்டும் - தென் சீனப் போலிசாரின் வித்தியாசமான தண்டனை இது .

படத்தின் காப்புரிமை SHENZHEN TRAFFIC POLICE/WEIBO
Image caption தெற்கு சீனாவில் வாகன முகப்பு விளக்குகளை அதிகமாக பிரகாசிக்கவிட்டு சென்றால் இதுதான் தண்டனை

ஷென்ஸென் நகர போக்குவரத்து காவலர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கில் தங்களுடைய பிரசார நடவடிக்கையின் புகைப்படங்களை பதிந்துள்ளனர். ''நீண்ட தூரம் ஒளிக்கதிரை உமிழும் விளக்குகளை கொண்டு இன்று இரவு நாங்கள் தண்டனைகள் வழங்க உள்ளோம்'' என்ற அவர்களுடைய பதிவு, 87 ஆயிரம் விருப்பங்களை ( லைக்ஸ்) பெற்றுள்ளது. மேலும், சுமார் 93 ஆயிரம் முறை அது பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களில், வாகனத்தின் முகப்பு விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்க அதற்கு முன்னால் தண்டனை நபர்கள் நேரடியாக அமரவைக்கப்பட்டுள்ளனர்.

சில ஓட்டுநர்கள் 300 யுவான் வரை (44 டாலர்கள் )அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பின் முகப்பு விளக்குகளுக்கு முன்னால் 60 நொடிகள் அமர வைக்கப்பட்டதாகவும் அதிகாரபூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சில இணையதள செய்தி நிறுவனங்கள், இந்த முகப்பு விளக்கு தண்டனை அவர்களுடைய இஷ்டத்திற்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது; ஆனால், அபராதத்தை செலுத்திய பிறகு, அதற்கு மேல், ஏன் மக்கள் இந்த தண்டனையை தேர்வு செய்வார்கள் என்பது தெளிவாகப் புரியவில்லை.

90% மக்கள் இதற்கு ஆதரவு

2014 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு திட்டத்தை போலிசார் கையாண்ட போது பல விமர்சனங்களை எதிர் கொண்டனர். ஆனால், இருப்பினும் கடந்த செவ்வாய்கிழமை முதல் இந்த முயற்சியை மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ளனர். இந்த முறை, பொதுமக்களின் எதிர்வினை பெரியளவில் சாதகமாக உள்ளது. போலிசாரின் இந்த நடவடிக்கையை பார்த்து, மற்ற பல உள்ளூர் போலிஸ் படையினரும் தங்களுடைய சொந்த சமூக வலைத்தள பக்கங்களில் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், சினா செய்தி நிறுவனத்தின் முக்கிய தளத்தில் நடத்தப்பட்ட வாக்கு பதிவில் சுமார் 90% பேர் போலிசாரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும்

வெய்போ என்ற குறுவலைப்பூ தளத்தில், பலரும் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். '' ஒரு நிமிடம் என்பதே குறைவு என்று நான் மட்டும்தான் நினைக்கிறேனா?'' என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு நபர் இந்த பிரசாரம் குறித்து,''காலம் கடந்து எடுக்கப்பட்டது'' என்றும், இன்னொருவர், ''சுயநலம், பிறரைப் பற்றி கவலைப்படாத ஓட்டுநர்கள்'' என்றும் கருத்து பதிவிட்டுள்ளனர். சிலர் மட்டுமே இந்த தண்டனை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இந்த தண்டனை சம்பந்தப்பட்டவரின் கண் பார்வையை மிகமோசமாக பாதிக்கும் என்றும், இது ஒரு மனித உரிமை மீறல் என்று மற்றொருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் ஷென்ஸென் போக்குவரத்து போலிசார் வழக்கத்துக்கு மாறான அபாராதங்களை விதித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்