டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு உலக நாடுகள் வாழ்த்து

அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டனை தோற்கடித்து, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, உலக தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

டெனால்ட் டிரம்பின் வெற்றி உலக அமைதிக்கு நல்லது என்றும், இது உலக விவகாரங்களில் குறைவான தலையீட்டை பொருள்படுத்துகிறது என்றும் இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் என்று கிரம்ளின் செய்தி சேவையை மேற்கோள் காட்டி ரஷ்யா24 தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.

அமெரிக்க ரஷ்ய உறவுகளில் ஏற்பட்டிருக்கும் உரசல்களை மீட்டெடுப்பதில் நம்பிக்கை தெரிவித்திருக்கும் அவர், இரு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்கின்ற சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை என்ற கொள்கையின் அடிப்படையில் உரையாடல் நடைபெறும் என்று நம்புவதாக புதின் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரான்ஸ்

பிரான்ஸின் வலது சாரி தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீயீ லியு பென் டிரம்பை பாராட்டியுள்ளார்.

"அமெரிக்காவில் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபருக்கும் சுதந்திரமான அமெரிக்க மக்களுக்கும் வாழ்த்துக்கள்" என்று அவருடைய ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியவரும், இந்த கட்சியை நிறுவியவருமான அவருடைய தந்தை குவன் மரீயீ லியு பென்னும் அவருடைய மகளோடு சேர்ந்து, "இன்று அமெரிக்கா, நாளை பிரான்ஸ்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்,

ஜெர்மனி

டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை பெரியதொரு அதிர்ச்சி என்று ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சர் ஊர்சூலா ஃபான் டயர் லியன் விவரித்திருக்கிறார்.

இந்த ஓட்டு அவருக்கானது அல்ல. இந்த நிறுவன அமைப்பிற்கு எதிரானது என்று டிரம்புக்கு தெரியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐரோப்பா

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்தெடுக்கப்பட்டிருப்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்காக உழைப்பதை கடுமையாக்கும் என்று ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் மார்ட்டின் சூல்ஸ் கூறியிருக்கிறார்.

"இது கடுமையக இருக்கும். இதற்கு முந்தைய நிர்வாகத்தைவிட கடுமையாக இருக்கும். ஆனால், சுதந்திரமாக தேர்தெடுக்கப்பட்டுள்ள அதிபர்" என்று பிரெஞ்சு வானொலியிடம் தெரிவித்திருக்கிறார்.

டிரம்பின் தலைமைக்கு போதுமான வலுவோடு அமெரிக்க அரசியல் அமைப்பு இருப்பதாக தெரிவித்த அவர், டிரம்ப் "அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பார்" என்று நம்புவதாக கூறியுள்ளார்.

"தேர்தல் பிரசாரத்தின்போது, தற்காப்பு பொருளாதாரம் பற்றிய சில அம்சங்களையும், பெண்கள், சிறுபான்மையினர் பற்றிய கவலையளிக்கதக்க சொற்களை கேட்டோம். ஆனால், பதவிக் காலத்தின்போதான உண்மையான அரசியல் என்பது, பிரசாரத்தின் போதான நிலையை விட வேறுபட்டதாக இருக்கும் என்பது எனது அனுபவம். எனவே, நாங்கள் தீவிர ஒத்துழைப்பை மீண்டும் மேற்கொள்வோம் என்று சூல்ஸ் தெரிவித்திருக்கிறார்.

சீனா

இருதரப்பு உறவுகளை வளர்க்க புதிய அமெரிக்க அரசோடு ஒத்துழைப்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிப்பதற்கு முன்னரே சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.