ஹிலரி ஏன் தோற்றார்?

அமெரிக்க வரலாற்றில்,நிச்சயமாக மிக அசாதாரணமான இந்தத் தேர்தல், அரசியல் நிறுவன அமைப்பிற்கு எதிரான கிளர்ச்சியாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Spencer Platt

ஹிலரி கிளின்டனை விட, இந்த அரசியல் நிறுவன அமைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் யாரும் இருக்க முடியாது.

மிகவும் கோபத்திலிருந்த பல மில்லியன் அமெரிக்க வாக்காளர்களுக்கு, இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது ஹிலரி கிளின்டன் அமெரிக்காவின் உடைந்த அரசியலின் முகமாக காட்சியளித்தார்.

டொனால்ட் டிரம்ப் வாக்காளர்களை தான் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குவதாக பல மாநிலங்களில் உள்ள போதுமான அளவு வாக்காளர்களை நம்பவைத்தார்.

வாஷிங்டன் அரசியலில் ஓர் அங்கமாக இருந்த ஹிலரிக்கு எதிராக, வெற்றிகரமாக அந்த அரசியல் வட்டாரத்திற்கு வெளியில் இருப்பவராக கோடீசுவரர் டிரம்ப் தன்னை காட்டிக்கொண்டார்.

டிரம்ப் எதிர்ப்பு வேட்பாளராகவும், ஹிலரி தற்போதைய அரசியல் நிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளராகவும் பார்க்கப்பட்டனர்.

ஹிலரிக்கு பிரச்சனையாக அமைந்தவை எவை ?

தொடர்ச்சியாக, ஹிலரி கிளின்டன், தான் தான் மிகவும் தகுதியான வேட்பாளர் என்று கூறி வந்தார்.

தனது தொழில் வாழ்க்கை விவரங்களை திரும்பத் திரும்ப ஹிலரி தெரிவித்தார்.

அவர் தனது கணவர் பில் கிளின்டனின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்த அனுபவம் மற்றும் அமெரிக்க செனெட்டில் நியூயார்க்கின் செனட்டராக இருந்தது மற்றும் வெளியுறவுச் செயலாளராக இருந்தது ஆகியவற்றை அவர் தொடர்ந்து தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த மிகவும் கோபச் சூழ்நிலை நிலவிய தேர்தலில், டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் முன் அனுபவம் மற்றும் தகுதிகள் போன்றவற்றை எதிர்மறையாகப் பார்த்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியான ரஸ்ட் பெல்ட் என்று அறியப்படும் பகுதியில் பலர் ஒரு தொழில் ரீதியாக இருக்கும் அரசியல்வாதியை விட, வெள்ளை மாளிகையில் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். வாஷிங்டன் பற்றி வாக்காளர்களுக்கு இருந்த வெறுப்பை நன்கு உணர முடிந்தது.

ஹிலரி மீதான வெறுப்பும் உணரக்கூடியதாக இருந்தது. வாக்காளர்கள் மத்தியில் உணர்வு பூர்வமாக ஹிலரி குறித்த வெறுப்பு இருந்ததாகச் சொல்லலாம்.

டென்னிசி பகுதியில் உள்ள ஓர் அழகான, மற்ற வகையில் நாகரிகமாகப் பேசிய மத்திய வயதுப் பெண் ஒருவர் நம் செய்தியாளரிடம் பேசுகையில், ஹிலரி பற்றிய பேச்சு வந்ததும், அவரது பாவமே முழுவதுமாக மாறிவிட்டது.

உழைக்கும் வர்க்கத்தின் வாக்குகளை இழந்த ஹிலரி

ஹிலரி கிளின்டனுக்கு மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே நம்பிக்கை தொடர்பான பிரச்சனை இருந்தது. அதனால் தான் அவரது மின்னஞ்சல் மோசடி பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.

அவர் உண்மையானவரா என்பது குறித்த சிக்கலையும் அவர் எதிர்கொண்டார் .

தொழிலாளர் வர்க்கத்தை மட்டமாகவும், கேலியாகவும் பார்த்த, கிழக்கு கடற்கரை பகுதியின் மேல்தட்டு வர்க்கத்தின் உயர்வான பெண்ணாக அவர் தோன்றினார்.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியதிலிருந்து, ஹிலரி கிளின்டன் மற்றும் அவரது கணவர் பெரிய அளவில் சொத்து சேர்த்த விஷயமும் அவருக்கு உதவவில்லை.

பலர் முன்னாள் அதிபராக இருந்த பில் கிளின்டன் மற்றும் அவரது மனைவியும் சாதாரண பணக்கார தாராளவாதிகளாக இல்லாமல் அதி செல்வந்த தாராளவாதிகளாக பார்க்கப்பட்டனர்.

மேலும், அவர்களது சொத்து அவர்களது பிரச்சனைகளை அதிகப்படுத்தியது.

படத்தின் காப்புரிமை Getty Images

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், சொத்து நிறைந்த ஒரு தொழில் அதிபராக டிரம்ப் இருந்தாலும், அவருக்கு மகிழ்ச்சியோடு வாக்களித்தனர்.

ஆண்களை விட மில்லியன் கணக்கான பெண்கள் வாக்களிக்கும் இந்த நாட்டில் ஹிலரி கிளின்டனின் பாலினம் அவருக்கு பெரும் சாதகமாக அமையும் என்று கருதப்பட்டது.

நாட்டின் முதல் பெண் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கும் மற்றும் உலக அரசியலில், மிகச் சவாலானதாக கருதப்படும் பெண்கள் அதி உயர் பதவிகளை அடைவதற்கான தடையை உடைத்தெறியவும், தனக்கு வாக்களிக்க இளம் பெண் வாக்காளர்களைத் தூண்ட அவர் மிகக் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது.

அது ஹிலரியின் போட்டி வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் உடனான பிரைமரி போட்டியில் தெளிவாக தெரிந்தது.

பெண்களை ஈர்க்க தவறிய ஹிலரி

பல பெண்கள் ஹிலரியைபற்றி உற்சாகமாக இருக்கவில்லை. ஹிலரி, அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தபோது, தனது இல்லத்தில் இருந்து கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிப்பதைத் தான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்த கருத்தை, இழிவான கருத்துக்களாக புரிந்து கொள்ளப்பட்டதை சிலர் நினைவுகூர்ந்தனர்.

ஹிலரி தனது கணவரின் பணிகளில் தலையிட்டது, பில் கிளின்டன் தங்களை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக குற்றம் சாட்டிய பெண்களை அவர் தாக்கியது பற்றியும் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டிய போது, பல பெண்கள் அதை ஆமோதித்தனர்.

சந்தேகத்திற்கு இடமில்லாமல், பழைய பாணி , பாலின பாரபட்ச நோக்கும், ஒரு பங்கை ஆற்றியது. பல ஆண் வாக்காளர்கள், ஒரு பெண் அதிபராக உருவாவதை சகித்துக் கொள்ளவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

பல அமெரிக்கர்கள் மாற்றம் வேண்டும் என்று எண்ணிய இந்த ஆண்டில், ஹிலரி மீண்டும் பழைய மாதிரியான ஆட்சியை வழங்குவதாகத் தெரிந்தது.

மேலும், வெள்ளை மாளிகையில், ஒரு கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெல்வது கடினம் தான். ஜனநாயக கட்சி இதை 1940களில் இருந்து இது போல மூன்றாவது முறை வெற்றி தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை.

ஆனால் இந்தப் பிரச்சனைகளை விட , அமெரிக்க வாக்காளர்களுக்கு கிளின்டன் தம்பதிகள் சலிப்பை ஏற்படுத்திவிட்டதும் உண்மை.

ஹிலரி கிளின்டன் இயற்கையில் ஒரு பிரச்சாரகர் அல்ல, வெகுவாக அவரது பேச்சுகள் மிகவும் தட்டையாக ஒரு விதமாக இயந்திரத்தனமாக இருந்தன.

அவரது பேச்சுக்கள், கேட்பதற்கு, முன்பே தீர்மானிக்கப்பட்ட விதமாக, இதய சுத்தியற்றவையாக ஒலித்தன. மின்னஞ்சல் ஊழல் மறுபிரவேசம் எடுத்தது அவரது பிரசாரத்தை திசை திருப்பியது, அது அவரது பிரசாரம் ஓர் எதிர்மறையான செய்தியோடு முடித்ததாகக் கருதப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

டிரம்ப்பின் கோஷத்திற்கு தலைசாய்த்த மக்கள்

அமெரிக்கா மீதான தனது பார்வையை அவர் அழகாகத் தொகுக்க எப்போதும் கஷ்டப்பட்டார்.

''ஒன்றிணைந்தால் பலமாக இருப்போம்'' என்ற ஹிலரியின் கோஷம் ''மீண்டும் அமெரிக்காவை மகத்தான நாடாக்குவோம்`` என்ற டிரம்ப்பின் கோஷத்தை விட கவர்ச்சிகரமாக எப்போதும் இல்லை.

''கிளின்டனின் பிரசாரத்தில் டஜன் கணக்கான கருத்துக்கள் பேசப்பட்டதால், அவர் தனது செய்தியைச் சரியாக வடிவமைப்பதில் இருந்த சிரமத்தை வெளிக்காட்டியது''

அவரது பிரசாரத்தில் யுக்தி ரீதியான தவறுகளும் இருந்தன.

கடந்த ஆறு தேர்தல்களிலும் ஜனநாயக கட்சிக்கு வாக்களித்த 18 மாநிலங்களில் நேரத்தைச் செலவிடாமல், வடக்கு கரோலினா மற்றும் ஒஹையோ போன்ற அவர் வெற்றி பெறுவதற்கு தேவையற்ற இடங்களில் அவர் கவனம் செலுத்தியதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய இடங்களில் இருந்த வெள்ளை இன உழைப்பாளர் வர்க்கத்தின் உதவியோடு, டிரம்ப், அந்த இடங்களில் 1984ல் இருந்து குடியரசு கட்சி வெற்றி பெறாமல் இருந்த ஒரு தடுப்புச் சுவரை உடைத்தெறிந்தார்.

இந்தத் தேர்தல் முடிவு வெறும் ஹிலரி கிளின்டனை நிராகரித்த தேர்தலாக மட்டும் இல்லாமல், பராக் ஒபாமாவுக்கு ஆதரவளித்த அமெரிக்காவின் பாதி அளவினரும் இவரை நிராகரித்திருப்பதை காட்டுகிறது.

ஆனால், இது மற்றொரு நாள் எழுத வேண்டிய செய்தி.