சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவு சட்டத்திற்கு எதிராக துருக்கியில் ஆர்ப்பாட்டம்

வயது குறைந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆண், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் வழக்கு எதுவும் இல்லாமல் விடுவிப்பதற்கான மசோதாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் இஸ்தான்புல்லில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption "இந்த சட்டத்திற்கு நாங்கள் கீழ்படிய போவதில்லை” என போராட்டக்காரர்கள் முழக்கம்

பரவலான வகையில் காணப்படும் குழந்தையிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கத்திற்கு தீர்வு காணும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால், குழந்தை பாலியல் வல்லுறவை இது சட்டப்பூர்வமாக்கும் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் போராட்டம்

"நாங்கள் வாயை மூடிகொண்டு மெளனம் காக்கப் போவதில்லை. இந்த சட்டத்திற்கு நாங்கள் கீழ்படியப் போவதில்லை. உடனடியாக இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்" என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

இஸ்மீர் மற்றும் ட்ராப்ஸோன் உள்பட பிற நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

"கட்டாயப்படுத்தி, மிரட்டி அல்லது பிற சம்மத கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல், வயது குறைந்த சிறுமியர் மீது பாலியல் தாக்குதல் தொடுத்தோர், பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொண்டால், அவர்களை விடுவிக்க இந்த சட்டம் அனுமதிக்கும்.

இது பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்க

சுமார் 3 ஆயிரம் பேர் இஸ்தான்புல்லின் காடிகோய் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"பாலியல் வல்லுறுவை சட்டமாக்க முடியாது" என்றும், இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய துருக்கி அதிபர் ரெசீப் தையிப் எர்துவானின் ஏகேபி கட்சியை குறிப்பிடும் வகையில் "ஏகேபி, என்னுடைய உடலில் இருந்து உன்னுடய கையை எடு" என்று சிலர் பதாகைகளை சுமந்தும், சுலோகங்களை எழுப்பியும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption "பாலியல் வல்லுறவை சட்டமாக்க முடியாது"

வலுக்கும் எதிர்ப்பு

"பாலியல் வல்லுறவை சட்டமாக்க முடியாது" என்று போராட்டக்காரர் ஃபாடிக் டெமிஸ்யுரெக் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒரு குழந்தையிடம் நீ நன்றாக இருக்கிறாயா என்று கேட்பது அந்த குழந்தை எப்படி பொருள்கொள்ளும்? 18 வயது வரை ஒரு குழந்தை குழந்தையாகவே இருக்கிறது. அதனால் தான் இது கண்டிக்கத்தக்கது. இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதற்காக நாங்கள் போராட கூடியுள்ளோம்" என்று அவர் கூறினார்.

"என்னுடைய மனசாட்சியின் குரலை செவிமடுப்பதால் நான் போராட வந்திருக்கிறேன். எனக்கு குழந்தைகள் உள்ளன. என்னுடைய குழந்தைகளுக்காக போராட வந்திருக்கிறேன். நாம் அனைவரும் இன்னும் வாழ முடியும் என்கிற ஒரு நாட்டில் வாழ நான் விரும்புவதால் இந்த போராட்டத்திற்கு வந்திருக்கிறேன்" என்று ஒரு தந்தையான காடிர் தெமிர் கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்த மசோதா பற்றி "மிகவும் கவலையடைவதாக" ஐநா தெரிவித்திருக்கிறது

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சிக்டெம் இவ்சில் என்பவர், "நான் ஒரு தாய். நான் எப்படி இதற்கு ஆதரவளிக்க முடியும்? இதனை நம்ப முடியவில்லை. இது சாதாரணமானதல்ல. பைத்தியகாரத்தனமானது" என்று கூறினார்.

மேலும், "இன்று காலையில் எழுந்து தொலைக்காட்சி செய்தியை கேட்ட பிறகு, நான் என்னுடைய மகளை 50 முறைக்கு மேலாக தொலைபேசியில் அழைத்து விட்டேன். இதனை என்னுடைய மகளுக்கு நடக்க நான் அனுமதிப்பதாக இருந்தால், இந்த நாட்டிலுள்ள தாய்மார்கள் நடக்க அனுமதித்தால் நாங்கள் உண்மையில் தாய்மார் அல்ல" என்று அவர் கூறினார்.

பாலியல் வல்லுறவு செய்தோருக்கு மன்னிப்பு

இந்த மசோதா, பாலியல் வல்லுறவு செய்தோரை மன்னிக்காது என்று இஸ்தான்புல்லில் நடைபெற்ற நேட்டோ கூட்டம் ஒன்றில் பேசிய நீதித்தறை அமைச்சர் பிகிர் போஸ்டாக் கூறினார்.

"இந்த மசோதா பாலியல் வல்லுறவு செய்தவரை நிச்சயமாக மன்னிக்காது.... நம்முடைய நாட்டின் சில பகுதிகளில் இருக்கின்ற பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி தான் இது" என்று அவர் குறிப்பிட்டார்.

மசோதா ஏற்புக்கு ஆரம்பகட்ட வெற்றி

இந்த மசோதா பற்றி எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம் ஏகேபி கட்சி சகாக்களிடம் ஆணையிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆரம்பகட்ட நாடாளுமன்ற சமர்ப்பணத்தில் இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரண்டாவது விவாதத்தில் இது மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption துருக்கிய அதிபர் எர்துவானின் ஏகேபி கட்சி, பாலியல் வல்லுறவை சட்டப்பூர்வமாக்குவதாக விமர்சகர்கள் குற்றச்சாட்டு

சர்வதேச அளவில் கவலை

இந்த மசோதா பற்றி "மிகவும் கவலையடைவதாக" ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நிதியம் கூறியிருக்கிறது.

"குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய இழிவான வன்முறை வடிவங்கள் அனைத்துமே குற்றங்கள். அவை குற்றங்களாக ஏற்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். எல்லா நிலையிலும் குழந்தைகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நிதியத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோஃப் பூலியராக் தெரிவித்திருக்கிறார்.

15 வயதுக்கு கீழான குழந்தைகளுடனான எல்லா பாலியல் செயல்பாடுகளையும், பாலியல் துஷ்பிரயோகம் என்று வரையறுக்கும் குற்றவியல் சரத்தை ஜூலை மாதத்தில் துருக்கியின் அரசியில் சாசன நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்த சர்ச்சைக்கு பிறகு இந்த மசோதா வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.