ஜோ காக்ஸை கொன்றவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை

பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸை கொலை செய்த நபருக்கு இங்கிலாந்தின் நீதிமன்றம் ஒன்று எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதை முடிவு செய்ய நடத்தப்பட்ட பிரிட்டனின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பிரசார காலகட்டத்தில் , ஜோ காக்ஸ் கொல்லப்பட்டார்.

இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் அவருடைய தொகுதியில் வைத்து ஜோ காக்ஸை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்தபோது, "பிரிட்டன் தான் முதலில்" என்று தாமஸ் மயர் கத்தினார்.

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோ காக்ஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து இருக்க வேண்டும் என்று பிரசாரம் மேற்கொண்டு வந்தவர். அவரை. கொலை செய்தது, அந்த தேசத்தையே உலுக்கியது.

படத்தின் காப்புரிமை PA

தன்னுடைய குடும்பம் எவ்வித பழிவாங்கும் தண்டனையும் தரப்படவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், வெறுப்புணர்வால் நிறைந்த ஒருவரின் வாழ்க்கையை பார்த்து இரக்கப்படுவதாகவும் தீர்ப்புக்கு பின்னர், மனைவியை இழந்த காக்ஸின் கணவர் பிரெண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தாக்குதலை முறியடிக்க முயற்சித்த ஒருவரை கத்தியால் குத்தியதாகவும் மயர் குற்றம் காணப்பட்டுள்ளார்.