கொலம்பிய அரசு - ஃபார்க் போராளிகள் இடையே புதிய அமைதி உடன்பாடு

கொலம்பிய அரசுக்கும் ஃபார்க் கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே, திருத்தியமைக்கப்பட்ட புதிய அமைதி உடன்படிக்கை வியாழக்கிழமை கையெழுத்தானது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அதிபர் சான்டோஸ் மற்றும் ஃபார்க் தலைவர் டிமோசென்கோ

அந்த உடன்படிக்கை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையை, நாடாளுமன்ற கீழவை, அடுத்த வாரத் துவக்கத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொலம்பிய அதிபர் மானுவெல் சான்டோஸும் ஃபார்க் கிளர்ச்சிக்குழுத் தலைவர் டிமோசென்கோவும் புதிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

முதலாவது உடன்படிக்கையை, கடந்த மாதம் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், குறைந்த வித்தியாசத்தில் பொதுமக்கள் நிராகரித்தனர்.

உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதத்தை தாங்கள் புறக்கணிக்கப் போவதாக முன்னாள் அதிபர் அல்வரோ உரைப் தலைமையிலான எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. அதே நேரத்தில், அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இரண்டாவது உடன்படிக்கையும் கிளர்ச்சிக் குழுவினருக்கு பல சலுகைகள் வழங்குவதாகவே உள்ளது என்றும், இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும் என்றும் உரைப் வாதிடுகிறார்.