பிரிட்டனின் புதிய 5 பவுண்டு நோட்டில் மாட்டுக் கொழுப்பு : எதிர்ப்பு தெரிவிக்கும் ’சைவர்கள்’

கடந்த செப்டம்பர் மாதத்தில் பிரிட்டனில் புதிய ஐந்து பவுண்டு நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption புதிய 5 பவுண்ட் நோட்டு

இந்த புதிய 5 பவுண்டு நோட்டு உறுதியானது. இது கிழிவதற்கு வாய்ப்பில்லை. இந்த புதிய நோட்டின் மீது பியர் மதுபானத்தை தெளித்து, அதனை துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு இயந்திரத்தை சுழல விட்டாலும் இந்த நோட்டு சேதப்படுவதில்லை. இவையெல்லாம் இந்த புதிய பவுண்ட் நோட்டு குறித்து கூறப்படும் பெருமைமிகு அம்சங்கள்.

ஆனால், இதற்கு எதிரான ஒரே விஷயம், இந்த புதிய பவுண்டு நோட்டு கொழுப்பு சத்து உள்ளது என்பது தான்.

பவுண்டு தாளில் கொழுப்பு சத்து எப்படி?

பிளாஸ்டிக் பாலிமரால் தயாரிக்கப்பட்ட இந்த 5 பவுண்டு நோட்டில் மிருகங்களின் கழிவுப் பொருட்களில் இருந்து பெறப்பட்ட மாட்டுக் கொழுப்பு சிறிய அளவில் இருப்பது சில சைவ உணவு உண்பவர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இறைச்சிக் கூடங்களில் மாட்டுக்கறி , ஆட்டுக்கறி அல்லது சில சமயம் பன்றிக் கறியிலிருந்தோ அல்லது உணவு தயாரிக்கும் முறையில் பெறப்பட்ட கொழுப்பு, சோப்பு கட்டிகள் மற்றும் மெழுகுவர்த்திகள் போன்றவற்றை உருவாக்க அடிப்படையாக பயன்படுத்தப்படுவது முந்தைய தலைமுறையினருக்கு நன்கு தெரிந்தது தான்.

பன்றி இறைச்சியின் சாரம்

புதிய 5 பவுண்டு நோட்டில் மாட்டுக் கொழுப்பு இருப்பது வெளிப்பட்ட பிறகு, சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் சமுக வலைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதிய 5 பவுண்டு நோட்டின் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று கோரி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

டிவிட்டர் வலைதளத்தில், புதிய பவுண்ட் நோட்டு தயாரிப்பின் போது தங்களின் உரிமைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்று சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் கூற, இதற்கு எதிர்தரப்பினரோ, சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் இதனை மிகைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Image copyright@MIZZAGGIE
Image caption புதிய பவுண்டு தாளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டிவிட்டர் கருத்து
படத்தின் காப்புரிமை Image copyright@DANNYFKNDEEZ

புதிய 5 பவுண்டுக்கு இந்து மத வழிபாட்டிடங்களில் தடை?

இந்து ஆலயங்களில் இந்த புதிய 5 பவுண்டு நோட்டுக்கு தடை விதிப்பது குறித்து தாங்கள் விவாதிக்கவுள்ளதாக பிரிட்டனில் உள்ள சில இந்து மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து சமூகத்தினர் பசுக்களை புனிதமாக கருதுகின்றனர். படுகொலை செய்யப்படும் மாடுகளின் தோலினால் தயாரிக்கப்படும் காலணிகள் மற்றும் பைகளை இந்து மதத்தை சேர்ந்த பலரும் பயன்படுத்துவதில்லை.

புதிய 5 பவுண்டினால் யூதர்களுக்கும் சிக்கலா?

விலங்குகளின் கொழுப்பு மற்றும் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துவது குறித்து யூத மதத்திலும் பல கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், இந்த புதிய பவுண்ட் நோட்டுகள் குறித்து பிரிட்டனின் யூத மதத் தலைவர்கள் அவ்வளவாகக் கவலைப்படவில்லை.

பிரிட்டன் யூதர்களுக்கான வாரியத்தை சேர்ந்த ஒரு பேச்சாளரான சைமன் ரவுண்ட் இது குறித்து பிபிசியிடம் கூறுகையில், ''5 பவுண்ட் நோட்டை உண்ணாத வரை, அதனால் யூதர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' என்று கூறினார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், ''மாட்டுக் கொழுப்பை உண்ண யூதர்களுக்கு மதரீதியாக அனுமதியில்லையென்றாலும், மாட்டுக் கொழுப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்'' என்று தெரிவித்தார்.

பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் விளக்கம்

இந்த திடீர் பரபரப்பு குறித்து பேங்க் ஆஃப் இங்கிலாந்து கூறுகையில், ''புதிய 5 பவுண்டு நோட்டில் மாட்டுக் கொழுப்பு இருப்பது குறித்த பிரச்சனைக்கு சாத்தியமாகும் தீர்வுகளை நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.'' என்று தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சனை தற்போது தான் தங்களின் கவனத்திற்கு வந்துள்ளது என்றும் இது குறித்து வெளிப்டுத்தப்பட்ட கவலைகளை தாங்கள் மிகவும் தீவிரமாக அணுகி வருவதாகவும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்