'பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும்'

நாளை டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு முதல், இந்தியா முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது தொடங்கும். அதே நேரத்தில், நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளி்ல் பழைய 500 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்த முடியும்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'பெட்ரோல் பங்குகளில் நாளை வரை மட்டுமே பழைய 500 ரூ. நோட்டுக்களை மாற்ற முடியும்'

முன்னதாக, கடந்த நவம்பர் 8-ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அப்போது, பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பொது மக்களின் நலன் கருதி பழைய 500 ரூபாய் நோட்டு பெட்ரோல் பங்குகளில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வரை பெறப்பட்டது. பின்னர், இந்த கால அவகாசம் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மத்திய அரசு மத்திய அரசு அறிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முந்தைய காலக் கெடுவை மாற்றி, நாளை வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.

அதே போல், நாளை டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு முதல், இந்தியா முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், சுங்க சாவடிகளில் பணம் வசூலிப்பதற்கு வசதியாக போதுமான அளவு பிஓஎஸ் (POS) இயந்திரங்கள் அங்கு உள்ளதாகவும் பிடிஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் டெபிட் அல்லது கடன் அட்டை மூலம் மக்கள் சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்தில் விமான பயண சீட்டுகளை வாங்க பழைய 500 ரூபாய் பெறுவது நாளை நள்ளிரவுடன் முடிவடையும் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்