தைவான் அதிபரோடு டிரம்ப் உரையாடல் - சீனா புகார்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தைவான் அதிபருடன் தொலைபேசி மூலம் பேசியிருப்பதற்கு சீனா தனது கடும் அதிருப்தியை அமெரிக்காவிடம் பதிவு செய்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption கடந்த ஜனவரி மாதத்தில் தைவானின் அதிபராக சாய் இங்வென் ஆனதற்கு டொனால்ட் டிரம்பின் குழுவினர் பாராட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது

அமெரிக்காவிடம் முறையான பிரதிநிதித்துவம் மூலம் சீனா இந்த புகாரை பதிவு செய்திருக்கிறது,

1979 ஆம் ஆண்டிலிருந்து தைவானோடுள்ள எல்லா முறையான உறவுகளையும் முடித்துவிட்டதாக, அமெரிக்கா கொள்கையளவில் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

எனினும், டிரம்பும் தைவான் தலைவரும் நெருக்கமான பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகள் தொடர்பாக விவாதித்ததாக டிரம்பின் நிர்வாக மாற்றக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அதிபர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட புகைப்படத்தில், தைவானின் அதிபர் சாய் இங்வென் டிரம்போடு தொலைபேசியில் உரையாடி கொண்டிருக்கிறார்

சீன - அமெரிக்க உறவுகளில் தேவலையற்ற நெருடல்கள் ஏற்படாமல் தடுக்க, தைவான் பிரச்சனையை கவனமாகக் கையாளுமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமை ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

முன்னதாக, சீனாவில் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாக சீனா கருதுகின்ற தைவானின் அதிபரோடு, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் பேசியிருப்பதற்கு சீனா எச்சரிக்கையுடன் நிராகரித்திருந்தது.

தைவான் அதிபர் சாய் இங்வென்னுடன், டிரம்ப் உரையாடி இருப்பது அமெரிக்கா நீண்ட காலமாகப் பின்பற்றி வரும் சீனா தொடர்பான ராஜீய கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காட்டுவதாக சீனா தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மாறுவதை மிகவும் நெருக்கமாக சீனா கண்காணித்து வருகிறது

"தைவானின் சிறியதொரு சூழ்ச்சி" என்று இந்த தொலைபேசி உரையாடலை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி விவரித்திருக்கிறார்.

சீன - அமெரிக்க ஸ்திரமான உறவுககு "ஒரே சீனா கொள்கை" தான் அடிப்படையாக இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த தொலைபேசி அழைப்பு அமெரிக்க கொள்கை மாற்றத்தின் அறிகுறியாக இருந்தால், சீனாவின் பதில் கோபமான ஒன்றாக இருக்கும் என்று பிபிசியின் சீன ஆசிரியர் (பதிப்பாசிரியர்) தெரிவித்திருக்கிறார்.