விமான விபத்தில் இறந்த பிரேசில் கால்பந்து அணியினருக்கு இறுதி மரியாதை செலுத்த லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆயத்தம்

கொலம்பியாவில் திங்களன்று ஒரு விமான விபத்தில் இறந்த பிரேசில் நாட்டு கால்பந்து அணியினரின் உடல்கள் ராணுவ விமானத்தில் கொண்டுவரப்படும் நிலையில், தெற்கு பிரேசில் விமான நிலையத்தில் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தயாராகி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

தெற்கு பிரேசிலைச் சேர்ந்த விளையாட்டு குழுவினருக்கு, மரணத்திற்குப் பிறகு அளிக்கப்படும் விருதுகளை, சிபேக்கோ விமான நிலையத்தில் வழங்கி, பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் கவுரவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பிறகு, கால்பந்து மைதானத்தில் நடக்கவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் சுமார் ஒரு லட்சம் பேர் அதாவது அந்த நகரத்தின் பாதி மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு வரிசையாக 51 சவப்பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.

கால்பந்து மைதானத்தின் மையப் பகுதியில் மலர் பாதையில், மலர்கள் மற்றும் கொடிகளில் வைத்துச் செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடுகளில் இறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் விபத்தில் உயிர் தப்பியஆறு நபர்களின் பெயர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது.