டிரம்ப் தொலைபேசி விவகாரம்: முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை - மைக் பென்ஸ்

அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும், தைவான் அதிபர் சாய் இங்வென்னும் நடத்திய தொலைபேசி உரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியதில்லை என துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

ஒரு நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரோடு மரியாதை நிமித்தமாகத்தான் டிரம்ப் பேசியிருப்பதாக ஏபிசி நியூஸூக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் ஒரே சீனா கொள்கையில் மாற்றத்தை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்று கேட்கப்பட்டபோது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாள் டிரம்ப் அதிபராக பொறுப்பெற்றுக் கொண்ட பிறகு, அந்த கொள்கை பற்றி அவர் கையாள்வர் என்று மைக் பென்ஸ் கூறியிருக்கிறார்.

கடந்த 1979 ஆம் ஆண்டு தைவானிடம் இருந்து மாற்றி சீனாவுடன் தன்னுடைய ராஜீய உறவுகளை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டது.

இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக சீனா முறையான புகாரை பதிவு செய்திருக்கிறது.

தைவானை சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாக சீனா கருதி வருகிறது.