பொது மக்கள் வெளியேற கிழக்கு அலெப்போவில் சிரியா போர் நிறுத்தம்

கிழக்கு அலெப்போ பகுதியிலான தாக்குதல்களை சிரியா படை நிறுத்தியிருப்பதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

போர்க்களப்பகுதிகளில் சிக்கியிருக்கும் பொது மக்கள் வெளியேறுவதற்கு இந்த போர் நிறுத்தம் உதவும். சுமார் 8 ஆயிரம் பேர் இப்பகுதியில் இருந்து வெளியேறுவர் என்று லாவ்ரோஃப் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்திய வாரங்களில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நான்கு ஆண்டுகளாக இருந்த கிழக்கு அலேப்போவிலுள்ள 75 சதவீத பகுதிகளை அரசு படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

மோதல்கள் தணிவடைந்திருப்பதாக தோன்றினாலும், அது முழுமையாக நிறுத்தப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Noor Hazouri / SARC

சாதகமானவை நடைபெறுவதற்கான அறிகுறி என்று இந்த போர் நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் அமெரிக்கா, இந்த அறிவிப்பு போர்க்களத்தில் பிரதிபலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கப் போவதாக கூறியிருக்கிறது.

ரஷ்யர்கள் சொல்வதை கவனமாக செவிமெடுக்கும் அதே சமயத்தில், அவர்களது நடவடிக்கைகளைக் கவனிப்பதும் , இந்த சூழ்நிலையில் எங்கள் அணுகுமுறையாக இருக்கிறது என்று வெள்ளை மாளிகைக்காக பேசவல்ல ஜாஷ் எர்னஸ்ட் கூறினார்.

ஜெர்மனியில் ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றிருக்கையில், கூட்டத்திற்கு வெளியே லாவ்ரோஃப் பேசுகையில், "கிழக்கு அலெப்போவில் பொது மக்களை வெளியேற்றும் பெரியதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், சிரியா படை தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

ரஷ்ய மற்றும் அமெரிக்க ராணுவ நிபுணர்கள் சனிக்கிழமை ஜெனீவாவில் சந்தித்து அலெப்போவில் நிகழும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகளை விவாதிப்பார்கள் என்று லாவ்ரோஃப் கூறியிருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரியுடன் லாவ்ரோஃப் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்குவதை அனுமதிக்கிற மற்றும் பொது மக்களை வெளியேற்றுகிற ஒரு போர்நிறுத்தம் பற்றி விவாதித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் உறுதி செய்திருக்கிறார். ஆனால், நாளை (சனிக்கிழமை) நடக்கவிருக்கும் இது குறித்த தொழில் நுட்பப் பேச்சுவார்த்தைகள் பற்றி இன்னும் திட்டமிட வேண்டியுள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்