போலி செய்திகளை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை- ஹிலரி

போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

"நிஜ உலகின் மீது தாக்கத்தோடு” ஒரு தொற்றுநோயாகப் பரவி வரும் போலிச் செய்திகள், அமெரிக்க ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக ஹிலரி கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு பரவியிருக்கும் பல போலி அறிக்கைகள், பரப்புரைகள், தீய கதைகள் ஆகியவற்றிற்கு எதிராக தனியார் மற்றும் பொதுத் துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

"பீட்ஸாகேட்" செய்தி உள்பட, இத்தகைய போலி செய்திகளுக்கு தானே இலக்காகி இருப்பதாகவும் ஹிலரி குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக கட்சியின் உயர் மட்ட தலைவர்களை உள்ளடக்கிய சிறு குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் கும்பல் ஒன்று வாஷிங்டன் பிட்ஸா உணவகத்திலிருந்து செயல்பட்டு வருவதாக அமெரிக்க தேர்தல் பரப்புரையின்போது தவறுதலான செய்தி வெளியாகியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த உணவகத்திற்குள்ளே தன்னுடைய துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

செய்தி அறிக்கைகளை "சுயமாக புலனாய்வு" செய்ய விரும்பியதாக அந்த தாக்குதல்தாரி தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

"ஆபத்தில் உயிர்கள்"

"போலி செய்திகள் என்று கூறப்படுபவை நிஜ வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது" என்று கேப்பிட்டல் ஹில்லில் வியாழக்கிழமையன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசியபோது ஹிலரி தெரிவித்தார்.

“இது அரசியல் அல்லது பக்கச்சார்பு பற்றியதல்ல. உயிர்கள் ஆபத்தில் சிக்குகின்றன. தங்களுடைய வாழ்நாள்களில், தங்களுடைய வேலைகளை செய்ய, தங்களுடைய சமூகங்களுக்கு பங்காற்ற முயன்று வாழ்ந்து வரும் சாதாரண மக்களின் உயிர்கள்” என்றார் அவர்.

எனவே, "தனியார் மற்றும் பொதுத் துறை தலைவர்கள் ஜனநாயகத்தையும் அப்பாவி மக்களின் வாழ்க்கையையும் பாதுகாக்க முயற்சிகளை தொடங்குவது கட்டாயமாகிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.

அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்போடு மோதி தோல்வியற்ற ஒரு மாதத்திற்கு பின்னர் ஜனநாயக கட்சியின் செனட் அவை உறுப்பினரான சிறுபான்மையினரின் தலைவர் ஹார்ரி ரொய்டு-வின் பதவி கால நிறைவு நிகழ்வில் பேசியபோது, அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

தேர்தலுக்கு பிறகு தலைநகரில் பேசுவதாக தான் நம்பியிருந்த பேச்சல்ல இது, என்று நகைச்சுவையாகவும் ஹிலரி குறிப்பிட்டார்.