அமெரிக்க தேர்தலில் தலையீடு: ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை - ஒபாமா

அமெரிக்க தேர்தல் பரப்புரையில் ரஷ்யா தலையிட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption "நாம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதனை நாம் செய்வோம்" - ஒபாமா

"நாம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதனை நாம் செய்வோம்" என்று என்பிஆர் அமெரிக்க வானொலி நிலையத்திற்கு பேட்டியளித்தபோது அவர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க ஜனநாயக கட்சி மற்றும் ஹிலரி கிளிண்டனின் முக்கிய உதவியாளரின் மின்னஞ்சல்களை, வலையமைப்பில் திருட்டுத்தனமாக புகுந்து தரவுகளை திருடியிருப்பதாக அமெரிக்காவால் ரஷ்யா குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், ரஷ்யா இதனை மறுத்துள்ளது.

இவ்வாறு கூறுவது "கேலிக்குரியது" என்றும், அரசியில் ரீதியாக புனையப்பட்டது என்றும் அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்பும் இதனை நிராகரித்திருக்கிறார்.

இந்த வலையமைப்பு ஊடுருவல்களுக்கு பின்னால், ரஷ்ய அதிபர் அலுவலகத்துடன் தொடர்புடைய ரஷ்ய ஊடுருவலாளர்கள் இருந்திருப்பதற்கு பெரும் சான்றுகள் இருப்பதாக அமெரிக்க உளவு துறை நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்த இணையவெளி தாக்குதல்களின் பின்னால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருப்பதாக வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் முக்கியமான தருணத்தில் மின்னஞ்சல்கள் வெளியானது ஜனநாயக கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டு வெளியான சில மணிநேரங்களில், "அமெரிக்காவின் தேர்தல்களின் நேர்மைத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்தவொரு வெளிநாட்டு அரசு முயலும்போதும், நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நேரத்திலும், இடத்திலும் நடவடிக்கை எடுப்போம்" என்று ஓபாமா தெரிவித்திருக்கிறார்,

"இந்த நடவடிக்கைகளில் சில வெளிப்படையாகவும், பொதுவாக அறிவிக்கப்பட்டும் நடைபெறும். சில ரகசியமாகவும் இருக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நான் இதனை அவரிடம் நேரடியாக பேசியிருப்பதால், புதின் என்னுடைய உணர்வுகளை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்" என்றும் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி ஒபாமா தன்னுடைய பதவி காலம் நிறைவடைந்து செல்லவிருக்கும் நிலையில், என்ன நடவடிக்கை அமெரிக்கா எடுக்கயிருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் முக்கியமான தருணத்தில் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்கள் வெளியானது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போக்கை டிரம்பின் பக்கமாக திருப்புவதில் ரஷ்யாவின் ஊக்குவிப்பு இருந்ததாக அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ முடிவுக்கு வந்திருந்திருக்கிறது. ஆனால், இதுவரை எந்தவொரு சான்றுகளும் இது தொடர்பாக வழங்கப்படவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரஷ்யாவின் ஊக்குவிப்பு இருந்ததாக முடிவுக்கு வந்துள்ள அமெரிக்காவின் சிஐஏ அதற்கான சான்றுகள் எதையும் வழங்கவில்லை

அமெரிக்க அதிபர் தேர்தலில் தங்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான தோல்வியை பூசி மெழுகவே, இந்த தேர்தலில் ரஷ்யாவின் ஈடுபாடு இருந்ததாக ஜனநாயக கட்சியினர் கட்டுக்கதையை புனைந்திருப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

டிரம்ப் புதினை தொடர்ந்து புகழ்ந்து பேசுவதும், ரஷ்யாவின் அதிபர் புதினோடு நெருங்கி பணிபுரிந்துள்ள எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் ரெக்ஸ் தில்லர்சனை அமெரிக்காவின் வெளியுறவு செயலராக தேர்ந்தெடுத்திருப்பதும் அமெரிக்கர்களிடையே கவலையை தோற்றுவித்துள்ளது.

"ரஷ்யா அல்லது ஏதோ ஒரு நிறுவனம் வலையமைப்பில் திருட்டுத்தனமாக புகுந்து தரவுகளை திருடியிருந்தால், அதற்கு எதிராக இதுவரை செயல்படாமல் வெள்ளை மாளிகை மௌனம் காத்தது ஏன்? என்றும், ஹிலரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் இந்த புகாரை தெரிவிப்பது ஏன்? என்றும் வியாழக்கிழமை டிரம்ப் தன்னுடைய டிவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே அக்டோபர் மாதத்தில், வரவிருக்கும் அதிபர் தேர்தலில் தலையிடும் நோக்க்கில் அமெரிக்க அரசியல் இணையதளங்களிலும், மின்னஞ்சல் கணக்குகளிலும் ரஷ்யா திருட்டுத்தனமாக புகுந்து தரவுகளை திருடியிருப்பதாக ஒபாமா நிர்வாகம் நேரடியாகவே குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது