ஜெர்மனில் ஆணி வெடிகுண்டை வெடிக்க வைக்க முயற்சித்ததாக 12 வயது சிறுவனிடம் விசாரணை

ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில், குறித்த நேரத்தில் வெடிக்கக் கூடிய ஆணி வெடிகுண்டை வெடிக்க வைக்க முயற்சித்ததாக 12 வயது ஜெர்மன் சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அந்த சிறுவனின் பெற்றோர் இராக்கை சேர்ந்தவர்கள் என்றும் சமீபத்தில் அவர் தீவிரவாத எண்ணம் கொண்டவராக மாறியிருக்கிறார் என்று ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நவம்பர் மாதத்தின் இறுதியில், மேற்கு நகரமான லுட்விக்ஸ்ஷஃபெனில் தோள் பை ஒன்றில் இந்த கருவியை அவர் விட்டு சென்றுள்ளார்.

ஆனால், குண்டு வெடிக்காமல், முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

பின், ஒருவாரத்திற்குமுன், அந்த வெடி குண்டை வெடிக்க வைக்க மீண்டும் அவர் முயற்சித்த போது, ஒரு வழிப்போக்கர் அங்கிருந்த தோள் பை குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, போலிசார் வெடிகுண்டை கைப்பற்றி பாதுகாப்பான இடத்தில் வெடிக்க வைத்தனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் குழுவுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் வயதின் காரணமாக இந்தச் சம்பவத்தில் தண்டிக்கப்படும் வாய்ப்பு குறைவு. ஆனால், அவர் இளைஞர் நலவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்புள்ளது.