இணையவெளி ஊடுருவல்: ரஷ்யாவுக்கு ஒபாமா எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வலையமைப்பில் புகுந்து மின்னஞ்சல்களை திருடியதாகவும், இந்த நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் ஆணையிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption "விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் ரஷ்யாவில் எதுவும் நடைபெறுவதில்லை" - ஒபாமா

வலையமைப்பில் புகுந்து நடைபெற்றிருக்கும் தரவு திருட்டு பற்றி ரஷ்ய அதிபர் நன்கு அறிவார் என்பதை குறிப்பிட்டு, "விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் ரஷ்யாவில் எதுவும் நடைபெறுவதில்லை" என்று ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றி கடந்த செப்டம்பரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் புதினிடம் எச்சரித்திருப்பதாக அதிபர் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

ஒரு மாதத்திற்கு பின்னர், அமெரிக்காவின் ஜனநாயக வழிமுறைகளை பாதிக்கும் அளவில் ரஷ்யா நடந்து கொள்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இணையவெளி ஊடுருவல் தொடர்பாக பக்க சார்பற்ற புலனாய்வை டிரம்ப் நடத்த வேண்டும் என ஒபாமா கோரிக்கை

அமெரிக்க ஜனநாயக கட்சி மற்றும் அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டனின் பரப்புரை தலைவரின் மின்னஞ்சல்களை வலையமைப்பில் திருட்டுத்தனமாக புகுந்து திருடியிருப்பதற்கு அதே பாணியில் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

"அவர்கள் என்னென்ன செய்கிறார்களோ, அதற்கு சரிசமமான நடவடிக்கைகளை நாமும் செய்ய முடியும் என்று அமெரிக்காவின் இணையவெளி திறனின் தாக்குதல் தன்மையை குறிப்பிட்டு ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டின் கடைசி செய்தியாளர் கூட்டத்தில் அதிபர் ஒபாமா இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டால் விளைந்திருக்கும் கடுமையான விளைவை பற்றி சில குடியரசு கட்சி உறுப்பினர்கள் உணரத் தவறியுள்ளனர் - ஒபாமா

தனக்கு அடுத்தாக அதிபராக பொறுப்பேற்க இருக்கிற டொனால்ட் டிரம்பின் பெயரை குறிப்பிடாத ஒபாமா, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டால் விளைந்திருக்கும் கடுமையான விளைவை பற்றி சில குடியரசு கட்சி உறுப்பினர்கள் உணரத் தவறியுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.

அதே வேளையில் ரஷ்யா மேற்கொண்டுள்ள இணையவெளி ஊடுருவல் தொடர்பாக பக்க சார்பற்ற புலனாய்வை டிரம்ப் நடத்த வேண்டும் என்று அதிபர் ஒபாமா வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக திசைதிருப்ப ரஷிய இணையவெளி ஊடுருவலாளர்கள் உதவியதாக அமெரிக்க உளவு துறை தெரிவித்ததை, கேலிக்குரியது என்றும் அரசியல் ரீதியாக புனையப்பட்டது என்றும் டொனாட்ல் டிரம்ப் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.